மீண்டும் வரிசை யுகத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் எதிரணிகள்: ரணில் தரப்பு காட்டம்
நாட்டில் மீண்டும் வரிசை யுகத்தை ஏற்படுத்துவதற்கே எதிரணிகள் முற்படுகின்றன. அதனால்தான் போலி பரப்புரைகள் முன்னெடுக்கின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை தேர்தல் தொகுதியின் வலய அமைப்பாளர் சண்முகம் திருச்செல்வம் தெரித்துள்ளார்.
எதிரணிகளின் இந்த மாய வலையில் மக்கள் சிக்கமாட்டார்கள் எனவும், அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துவிட்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
ஜனாதிபதி தேர்தல்
" நாட்டில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல வேட்பாளர்கள் களமிறங்கி பிரசாரங்களை முன்னெடுத்தாலும், இந்நாட்டை ஆள்வதற்குரிய ஆணையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்குவதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துவிட்டனர்.
மக்கள் இவ்வாறு ஜனாதிபதி பக்கம் நிற்பதால் அவரின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இற்றைக்கு ஈராண்டுகளுக்கு முன்னர் இந்நாடு எந்த நிலையில் இருந்தது?
வரிசைகளில் மக்கள் செத்து மடியும் நிலை காணப்பட்டது. மக்கள் பற்றி சிந்தித்து ஆட்சியை பொறுப்பேற்காது, அரசியல் தலைவர்கள் ஓடியபோதும், சவாலை ஏற்று சாதித்து காட்டியவர்தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவர் இல்லாவிட்டால் இந்நாடு அதலபாதாளத்துக்குள் விழுந்திருக்கும்.
இன்று பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள நிலையே இலங்கையில் ஏற்பட்டிருந்தது. ஆனால் எமது நாட்டுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருந்ததால் இன்று நாம் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றோம்.
பங்களாதேஷ் மக்களுக்கு ரணில் போன்றதொரு தலைமைத்துவமின்மை அவர்களின் துரதிஷ்டமே”என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |