சீரற்ற வானிலை காரணமாக வான்கதவுகள் திறப்பு:மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
வவுனியா
வவுனியா - பேராறு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளமையால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.
அந்தவகையில் பேராறு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக பேராறு நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, பேராறு நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள புதுக்குளம், சாஸ்திரிகூழாங்குளம், ஈச்சங்குளம், மருதமடு, பாலமோட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும், இன்று திங்கட்கிழமை மாலை முதல் பெய்த மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் மழை நீர் சூழ்ந்து கொண்டுள்ளதோடு,மக்களின் வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
எனினும் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் மழை நீர் சூழ்ந்து கொண்டுள்ள போதும் தற்போது வரை எவ்வித இடப் பெயர்வுகளும் இடம் பெறவில்லை என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.





