சந்திவெளியில் புதிய பொலிஸ் நிலையம் திறப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 4 பொலிஸ் நிலையங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் முதலாவதாக மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையின் சந்திவெளி பிரதேசத்தில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவினால் இன்று குறித்த நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கான அனுமதியை பொலிஸ் மா அதிபர் வழங்கியதையடுத்து இந்த புதிய பொலிஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12 பொலிஸ் நிலையங்களின் சம அந்தஸ்தில் இது 13வது பொலிஸ் நிலையமாகும்.
30 பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சேவையைத் தொடங்கவுள்ள புதிய சந்திவெளி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக எம்.சுதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தினால் சேவையாற்றப்பட்டு வந்த நிலையில் சந்திவெளி எனப் பிரிக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் நிலைய பிரதேசம் 12 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 33 ஆயிரம் மக்களுக்குச் சேவை வழங்கும் என்று ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ கே.ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தினேஷ் கருணாநாயக்க தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கீழ் புணாணை எனும் இடத்தில் தற்போது இயங்கி வரும் பொலிஸ் சோதனைச் சாவடி புணானை பொலிஸ் நிலையமாகவும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் கொக்குவில் பொலிஸ் சோதனைச் சாவடியாக இயங்கிவரும் சோதனைச்சாவடி கொக்குவில் பொலிஸ் நிலையமாகவும், காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இயங்கி வரும் கர்பலா பொலிஸ் சோதனைச் சாவடி தாளங்குடா பிரதேச பொலிஸ் நிலையமாகவும் காணப்படுகின்றன.
மேலும் 3 பொலிஸ் நிலையங்கள் இவ்வருட இறுதிக்குள் திறக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தினேஷ் கருணாநாயக்க, மட்டக்களப்பு கோட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எச். சுதத் மாரசிங்ஹ, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உட்பட அதிகாரிகளும், சமயத் தலைவர்களும், சமூக முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.









வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
