இலங்கைக்கு உதவ சர்வதேசம் தயாராக இல்லை
புதிய நிர்வாகத்தால் மாத்திரமே நாட்டில் நிலவும் நெருக்கடிகளை தீர்க்க முடியும். அமைச்சுப் பதவிகளை மாற்றுவதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஒரு குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் நீடிக்க வேண்டும் என்றும், ஏனையவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கும் போது அரசாங்கம் எவ்வாறு செயற்பட முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக தற்போதைய நிர்வாகத்திற்கு உதவ எந்தவொரு சர்வதேச அமைப்பும் தயாராக இல்லை.
அனைத்து கடனாளிகளிடமிருந்தும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நீடிப்பை அரசாங்கம் பெறும் பட்சத்தில் மாத்திரமே சர்வதேச நாணய நிதியம் தலையிட்டு உதவிகளை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தவுடன் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 40 சதவீதம் அதிகரிக்கும், உதவி வழங்கிய பின்னர் நாடு கடனை திருப்பிச் செலுத்த முடியுமா என்பதையும் IMF ஆராயும்.
அனைத்து நாடுகளும் கடன் பெறும் போது முதலீடுகளை செய்து இலாபத்தின் ஊடாக கடனை அடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் அமையும் பட்சத்தில், சர்வதேச சமூகங்களும் புதிய நிர்வாகத்தை கையாள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நிர்வாகத்தை அனுமதிப்பார்கள்.
நாடாளுமன்றத்திற்குள்ளேயே தீர்வுகளை வழங்குமாறு சபாநாயகர் கோருகின்ற போதிலும் ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமையினால் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமையே தற்போது நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதே பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த முயற்சிக்கின்றனர் என்றார். அரசாங்கம் மட்டுமன்றி பொதுமக்களும் அழிவை எதிர்நோக்கி வருகின்றனர்.
“செழுமை மற்றும் விசேட” கொள்கை அறிக்கையை சமர்ப்பித்த நபர்கள் நாட்டை உதவிக்காக கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட் -19 தொற்று நோயின் போது வெளிநாட்டு கையிருப்பு குறைவதை எதிர்கொள்ளும் ஒரே நாடு இலங்கை என்றும், அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானைத் தவிர ஏனைய அனைத்து நாடுகளும் வெளிநாட்டு கையிருப்பில் 25-30 சதவீத வளர்ச்சியைக் கண்டன என தெரிவித்துள்ளார்.



