மஹர சிறைச்சாலை அதிகாரிகள் மட்டுமே கைதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர்
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது கைதிகளை சிறை அதிகாரிகள் மட்டுமே சுட்டுக் கொன்றுள்ளதாக இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் கைதிகள் அதிகமாக இருப்பது, கொரோனா குறித்த அச்சம் மற்றும் வழங்கப்படும் உணவின் தரம் குறைவாக இருப்பதும் இந்த சம்பவத்திற்கு காரணமாக அமைந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர் டி சில்வா,
சிறைச்சாலையில் காணப்படும் இடநெருக்கடி இதற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் அச்சம், தரமற்ற உணவு வழங்கப்பட்டமை என்பது இதற்கு காரணம்.
சில நேரங்களில் கறி சொதிகளில் தண்ணீர் கலந்து பரிமாற்றப்பட்டுள்ளது. கைதிகள் நிலைமையை விளக்கி அதிகாரிகளுடன் கலந்துரையாட சென்ற போது பிரச்சினை அதிகரித்துள்ளது.
இதன் போது தம்முடன் முரண்பாடுகள் இருக்கும் கைதிகள் தம்மை சந்தித்தால் கைதிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
சில கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனைக்குள் நுழைந்து, மாத்திரைகளை எடுத்து, குடித்தவுடன் மற்றவர்களுக்கும் வழங்கினர் என்பதற்கான சாட்சியங்கள் மூலமான ஆதாரங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக கைதிகள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
11 கைதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சிறை அதிகாரிகள் மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தடயவியல் பரிசோதனை, பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் கைதிகளின் சாட்சியங்கள் மூலமே இந்த துப்பாக்கிச் சூடு சட்டத்தின் உட்பட்டு நடத்தப்பட்டதா என்பது குறித்த முடிவுக்கு வர முடியும் எனவும் யு.ஆர் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.