தொடருந்து சேவைகளால் பயணிகள் எதிர்நோக்கும் அவலங்கள்! தொழிற்சங்கம் வெளியிட்ட தகவல்
தொடருந்து திணைக்களம் முன்பு தினமும் இயக்கி வந்த சுமார் 360 தொடருந்து சேவைகளில் தற்போது சுமார் 150 தொடருந்து சேவைகள் மட்டுமே இயங்குவதாக சுயாதீன தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், ஒன்றியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் இந்திக தொடங்கொட கூறியதாவது,
தற்போது இயக்கத்தில் உள்ள தொடருந்துகள் கூட புறப்படும் நேரங்களில் அடிக்கடி தாமதமாகி, பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன.
பல பயணிகள் தொடருந்து நிலையங்களில் இருந்து வீடு திரும்புவதற்காக பேருந்து உள்ளிட்ட மாற்று போக்குவரத்து வசதிகளை இலக்கு வைத்தே தொடருந்தில் பயணிக்கும் கட்டாயத்தில் உள்ளனர்.
தொடருந்து தாமதங்கள்
உதாரணமாக, நேற்று (15.02.2026) கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட மஹவ தொடருந்து 54 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இத்தகைய தாமதங்கள் தற்போது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
இந்த நிலைமை தொடருந்து நிர்வாகத்தின் செயல்திறன் குறைபாட்டை வெளிப்படுத்துவதாக தொடங்கொட இதன்போது குற்றம் சாட்டியுள்ளார்.
தேவையான இஞ்சின்களை வழங்கும் திறன் இருந்தும், பயணிகளை கருத்தில் கொள்ளாமல் தினசரி தொடருந்துகள் தாமதப்படுத்தப்படுகின்றன.

மேலும், தினசரி தொடருந்து போக்குவரத்தில் தொடர்ச்சியாக ஏற்படும் தாமதங்களால், பல பயணிகள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு தனியார் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் அதிக செலவுகளைச் செய்ய வேண்டிய சிரமங்களுக்கு பொதுமக்கள் உள்ளாகுவதாக கூறப்படுகிறது.