சஜித் தரப்பினால் சபாநாயகருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தை அங்கீகரிப்பதற்கு முன்னர் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று(26.01.2024) கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
இணையவழி பாதுகாப்புச் சட்டமூலம்
அவர் மேலும் தெரிவிக்கையில், “உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த சில திருத்தங்களுக்கு அரசாங்கம் இடமளிக்கவில்லை.
இந்தநிலையில் இணையவழி பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து விவாதிக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் வலியுறுத்த தமது கட்சி தீர்மானித்துள்ளது.
உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த சில திருத்தங்கள் செய்யப்படாததால், இணையவழி பாதுகாப்பு யோசனைக்கு சபாநாயகர் ஒப்புதல் அளிக்கக் கூடாது.
மேலும், சம்பந்தப்பட்ட திருத்தங்கள் செய்யப்படுவதற்கு முன்னர், சபாநாயகர் குறித்த யோசனைக்கு ஒப்புதல் அளித்தால் நாடாளுமன்றுக்கும் நீதித்துறைக்கும் இடையே மோதல் ஏற்படும்.
அதேவேளை, சபாநாயகர் சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளித்தாலும், அதற்கு எதிராக பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்பதே உண்மை.
அத்தோடு நாட்டின் நாடாளுமன்றமே உச்சமானது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட சூழ்நிலையாக இருப்பதால், அனைத்து திருத்தங்களும் செய்யப்படுவதற்கு முன்னர் சபாநாயகர் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு ஒப்புதல் அளித்தால் அதனை நீதிமன்ற அவமதிப்பாகக் கருத முடியாது.
ஏனெனில் நாடாளுமன்ற விவகாரங்களில் நீதித்துறை தலையிட முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |