புதிய இணைய சட்டத்தின் கீழ் யூடியூப் அலைவரிசை ஒன்றுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு (Vikum Liyanage) எதிராக அவதூறான தகவல்களை வெளியிட்ட யூடியூப் அலைவரிசை ஒன்றை தடுப்பதற்கான உத்தரவை புதிய இணைய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
குறித்த உத்தரவானது, இன்று (15.05.2024) கொழும்பு (Colombo) பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, 2024ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் இராணுவத் தளபதிக்கு ஆதரவாக நிபந்தனையுடன் கூடிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அவதூறான காணொளி
அத்துடன், அந்த உத்தரவை பிரதிவாதிகளுக்குத் தெரிவிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் தேசியப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில், தனக்கு எதிராக தீங்கிழைக்கும் மற்றும் அவதூறான காணொளி உள்ளடக்கங்கள் மற்றும் அறிக்கைகளை பிரதிவாதிகள் பதிவேற்றியதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இணையச் சட்டத்தின்படி, குறித்த விடயத்துக்கு விளக்களிக்குமாறு பிரதிவாதி தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |