மயிலிட்டியில் தொடரும் போராட்டம் - காணி உரிமையாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கஜேந்திரகுமார்
யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டமானது, இன்று(11.09.2026) மயிலிட்டியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
காணி உரிமையாளர்களின் கோரிக்கை
இந்தநிலையில் யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே உள்ளது.

தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வருவதுடன் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர், காணி உரிமையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

