அநுர ஆட்சியில் தொடரும் பாரிய மோசடிகள் - சிறிதரன் எம்.பி குற்றச்சாட்டு
இனவாதத்தை மூலதனமாக வைத்துக்கொண்டே தொடர்ந்தும் ஆட்சிக்கு வரும் அரசாங்கள் இயங்குகின்றன. அதே போன்று தான் தற்போது ஆட்சியில் இருக்கும் அநுர அரசும் செயற்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - சோரன்பற்று பகுதியில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .
ஊழல் தொடர்ச்சி
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் தினமும் ஒவ்வொரு விதமான செய்திகளை கேள்விப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அரசாங்கம் நிலக்கரியை கொள்வனவு செய்திருந்தது. அதில் 20 வீதம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் மிகுதி சாம்பலாக போய்விட்டது.
இதனால் என்ஜின்கள் பழுதடைந்துள்ளதுடன், இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. அந்த நிதியை அரசாங்கம் மக்களிடமே அறவிடுவார்கள். இது அரசாங்கம் விட்ட பாரியதொரு தவறு.

அதன் பிறகு, 25 மில்லியன் டொலரை மத்திய வங்கியில் காணவில்லை. அதுவும் 15 உயர்மட்ட அதிகாரிகள் கையெழுத்து வைத்தே அந்த நிதி வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சென்றுகொண்டிருந்தால் இலங்கை எவ்வாறு முன்னேறும். இந்த ஊழல் செயற்பாடுகள் இலங்கையைில் மட்டுமல்ல, ஆசிய நாடுகள் அனைத்திலும் இடம்பெற்று வருகின்றன.
இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டுநாயக்க விமான நிலையத்தில் 22 புத்த பிக்குமார் 110 கோடி பெறுமதியான போதைப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதைப் பொருட்கள் இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்பட்டால் ஒரு சந்ததியே அழிந்து விடும்.
நாட்டிலுள்ள எத்தனையோ பேர் போதைக்கு அடிமையாகியுள்ளதுடன், மனநலம் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பரந்தனில் அண்மையில் ஒரு இளைஞன் போதைப் பொருள் பாவணையால் உயிரிழந்துள்ளார்.

நல்ல விடயங்களை மக்களுக்கு போதிக்கக் கூடிய தூதர்கள் போதைப் பொருட்களை கொண்டு வந்து இனத்தை அழிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த நாட்டிற்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் பணம் உழைப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர்.
இனவாதத்தை மூலதனமாக வைத்துக்கொண்டு தமிழர்களை எதோவொரு வகையில் புறந்தள்ளி தங்களை மாத்திரம் அடையாளப்படுத்துவதில் கவனமாக உள்ளார்கள். இதனை தான் அநுரவும் செய்து வருகிறார்.
அநுர ஆட்சிக்கு வரும் பொழுது, அவரால் நாடு முன்னேறும் என நம்மில் பலரும் கூட கோஷமிட்டனர். அநுர ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்து விட்டன. ஆனாலும் தமிழர் பகுதிகளில் காணி பிரச்சினை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது என்றார்.
கொழும்பிலிருந்து சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு! காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்