க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஒருவார கற்றல் விடுமுறை
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ள மாணவர்களுக்கு ஒருவார கற்றல் விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தலானது கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேராவினால் அனைத்து மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
2020 இற்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இதற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கே எதிர்வரும் 17ஆம் திகதி முதல் பெப்ரவரி 25ஆம் திகதி வரையில் கல்வி கற்பதற்காக விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரங்களை வழங்கும் போது, கற்றல் விடுமுறைக்கு பாதிப்பை ஏற்படாதவாறு செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.