சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலி துவக்குகலவத்தை விகாரைக்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது பாறை ஒன்று வீழ்ந்ததில் அங்கிருந்த 78 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது குறித்த நபர் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோசமான வானிலை
இதேவேளை, நாடளாவிய ரீதியில் நிலவும் மோசமான வானிலையினால் மேலும் ஐம்பதாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக மாத்தறை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததால் அக்குரஸ்ஸ, அத்துரலிய, கம்புருபிட்டிய, திஹாகொட, மாலிம்படை மற்றும் மாத்தறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெரும் அபாயச் சூழல்
இதற்கமைய வெள்ளத்தில் சிக்கியுள்ள மாத்தறை, கம்புறுபிட்டிய, கத்துவ கிராம மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளையும் இன்றும் நாளையும் மூடுவதற்கு நேற்று தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, மாத்தறை நில்வளா கங்கை பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்தால் மாத்தறை மாவட்டம் பெரும் அபாயச் சூழலுக்கு உள்ளாகலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.