பெருந்தொகையான அபாயகரமான போதைமாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற மருத்துவர் கைது
பெருந்தொகையான அபாயகரமான போதைமாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவரும், மற்றொரு நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 'பிரிகேபலின்' வகையைச் சேர்ந்த 1270 அபாயகரமான போதை மாத்திரைகள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற மருத்துவர் 70 வயதுடையவர் என்பதோடு, அவர் தற்போது எல்பிட்டிய பகுதியில் தனியார் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட நபர்
மற்றைய சந்தேகநபர் 30 வயதுடையவர் என்றும், அவர் தனியார் நிறுவனம் ஒன்றின் விநியோகப் பிரதிநிதி என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் ஒருவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி இந்த ஔடதங்களை மருந்தகங்கள் மூலம் பெற முடியாது என்பதால், குறித்த மருத்துவர் தனது உத்தியோகபூர்வ அடையாள அட்டையைப் பயன்படுத்தி மாத்தறை மாவட்டத்திலுள்ள மருந்தகங்களில் இருந்து இந்த மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளார்.
பின்னர் அவற்றை எல்பிட்டிய பகுதிக்கு எடுத்துச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.