கோடிக்கணக்கான பணத்துடன் தப்பிச்சென்ற வான் சாரதி: சுற்றிவளைத்த விசேட அதிரடிப் படையினர்
ஹட்டன் நகரில் 6 கோடி ரூபா பணத்துடன் வானொன்றை கடத்திய சாரதி நேற்று மாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கண்டியிலிருந்து தனியார் நிறுவனம் ஒன்றினால் 6 கோடி ரூபா பணம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த தனியார் நிறுவன அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிடுவதற்காக நேற்று மதியம் சென்றுள்ளனர்.
அதிகாரியும், பாதுகாப்பு ஊழியரும் வானில் இருந்து இறங்கிய நிலையில் உடனடியாக சாரதி பணத்துடன் வானில் தப்பிச்சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து நிறுவனத்தின் அதிகாரியும், பாதுகாப்பு ஊழியரும் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ள நிலையில் வான் தலவாக்கலை - லிந்துலை வழியாக அம்பேவல பகுதிக்கு பயணிப்பதாக தொழிநுட்ப உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து நுவரெலியா - பதுளை பிரதான வீதியின், கெப்பட்டிபொல ரேந்தபொல பகுதியில் வைத்து நுவரெலியா விசேட அதிரடிப் படையினர் வானை சுற்றிவளைத்துள்ளதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட சாரதியும், பணம் மற்றும் வானும் கெப்பட்டிப்பொல பொலிஸ் நிலையத்தில் வைத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேகநபரை இன்றைய தினம் ஹட்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





