நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கொழும்பு, கம்பஹா உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 30 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இரு மாவட்டங்கள்
குறித்த இரு மாவட்டங்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழந்துள்ளனதுடன் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
இதேவேளை, தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் காற்று சுழற்சி இன்று (14.10.2024) காலை காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நாளை மறுதினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்வரும் 17.10.2024 அல்லது 18.10.2024 அன்று தமிழ்நாட்டின் வட பகுதிக்கும் ஆந்திராவின் தெற்கு பகுதிக்கும் இடையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ( கடல் மேற்பரப்பு வெப்பநிலை(Sea Surface Temperature-SST) 30 பாகை செல்சியஸ் இனை விட உயர்வாக இருப்பதாலும் மேடன் யூலியன் அலைவு (The Madden-Julian Oscillation (MJO) சாதகமாக இருப்பதனாலும் இது ஒரு தீவிர தாழமுக்கமாகவே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளை அதிகாலை முதல் கன மழை கிடைக்க தொடங்கும். இடையிடையே இது இடி மின்னலோடு கூடிய மழையாக இருக்கும். இந்த மழை எதிர்வரும் 18.10.2024 வரை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றரை விட அதிகமான வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள் நிலப்பகுதிகளில் காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாழமுக்கம் காரணமாக கடற் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |