மத்திய வங்கி நிதி அமைச்சுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கையில் இந்த ஆண்டில் வாகன இறக்குமதிகளுக்காக ஒரு பில்லியன் டொலரை ஒதுக்குமாறு மத்திய வங்கி, நிதி அமைச்சிற்கு அறிவித்துள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து இந்த தொகையை ஒதுக்குமாறு அறிவித்துள்ளது.
இதன்படி அரசாங்க வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் வாகனங்களுக்கான வரியை நிதி அமைச்சும், அமைச்சரவையும் தீர்மானிக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வாகனங்கள் இறக்குமதி
அந்நிய செலாவணி வருமானம் வீழ்ச்சியடைந்த காரணத்தினால் வாகனங்கள் மற்றும் தங்கம் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமாயின் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தற்போது நாட்டில் இருப்பதால், அவற்றின் பராமரிப்புக்கும் அதிக செலவாகும் என்பதால் புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு இன்னும் நல்ல அளவில் இல்லை என்றும், ஆனால் வெளிநாட்டு கையிருப்பு அளவை படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய செலாவணி
அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் இலக்கை பாதிக்காத வகையில், வாகனங்களை இறக்குமதி செய்ய எவ்வளவு தொகையை ஒதுக்கலாம் என மத்திய வங்கி ஆய்வு செய்து, அதன்படி, ஒரு பில்லின் டொலர் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்ய முடிடியும் என்ற பரிந்துரையை நிதியமைச்சிற்கு வழங்கியதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதன் மூலம் வாகன இறக்குமதிக்கான அந்நிய செலாவணி ஒதக்கத்தை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒரு பில்லியன் ஒதுக்கமானது அந்நிய செலாவணி கையிருப்பினை பேணுவதற்கும் அதிகரிப்பதற்கும் தடையாக அமையாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.