புத்தளத்தில் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது
புத்தளம் (Puttalam) மாரவிலப் பகுதியில் வலம்புரிச் சங்கை 15 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரினால் குறித்த நபர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
புத்தளம் மாரவில
புத்தளம் மாரவில பகுதியில் ஒருவர் வலம்புரிச் சங்கு வைத்திருப்பதாக மீரிகம விமானப்படைப் புலனாய்வுப் பிரிவருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதற்கமைய, நேற்று பிற்பகல் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து வலம்புரிச்சங்கை 15 இலட்சம் ரூபா ஒப்பந்த அடிப்படையில் வாங்கும் நோக்கில் குறித்த நபரை வலம்புரிச் சங்குடன் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாரவில பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனவும், கைப்பற்றப்பட்ட வலம்புரிச் சங்கு சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடையது என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று மாலை பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் எதிர்வரும் புதன்கிழமை மாரவில நீதிமன்றத்தில் அவரை முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |