சுமார் 4 கோடி பெறுமதியான போதைப்பொருட்களை சூட்சுமமாக கடத்தி வந்த சந்தேகநபரை
பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக
கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு
பேருந்து ஒன்றில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதி சொகுசு பேருந்து சோதனை
பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஜயரட்ணவிற்கு
கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய நேற்று (29) அதிகாலை 4.30 மணியளவில்
கொழும்பு - கல்முனை அதி சொகுசு பேருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க சந்தேகநபரான
குடும்பஸ்தர் பயணப்பை ஒன்றில் சூட்சுமமாக கொண்டு வந்திருந்த 4 கோடி ரூபா
பெறுமதியான பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் கைதாகியுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கொண்டு வந்த போதைப்பொருட்களில் குஷ், கேரள கஞ்சா, ஐஸ், ஹெரோயின் உட்பட 4 வகையான போதைப்பொருட்கள், 2 தொலைபேசிகள், ஒரு தொகை பணம் என்பன நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.
மேலதிக விசாரணை
இச்சம்பவத்தில் கைதான சந்தேகநபரை பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு
அழைத்து வந்து கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது சுமார் 20 முதல்
30 வரையிலான 6 போதைப்பொருள் சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக சம்மாந்துறை உட்பட
ஏனைய பொலிஸ் நிலைய பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.
இந் நடவடிக்கையில் கைதான 6 சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் கைதான பிரதான சந்தேகநபரை இன்று (30.01.2026) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட
நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்த பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை
மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

