ஆசிய நாடுகளில் பரவும் நிபா வைரஸ் - ஆபத்து தொடர்பில் இலங்கைக்கு எச்சரிக்கை
ஆசிய நாடுகளில் பரவி வரும் ஆபத்தான நிபா வைரஸ் பரவல் குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை விமான நிலையங்கள் மற்றும் குடிவரவு மையங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கு தேவையான சுகாதார ஆலோசனைகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிபா வைரஸ்
உலகின் மிக அபாயகரமான 10 வைரஸ்களில் ஒன்றாக நிபா வைரஸினை உலக சுகாதார நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸிற்கு இதுவரை முறையான தடுப்பூசிகள் அல்லது மருந்துகள் கண்டறியப்படவில்லை. இதனால், இந்த வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது மட்டுமே ஒரே வழி என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது பழங்களை உண்ணும் வௌவால்கள் மூலம் பரவுவதாக கூறப்படுகின்றது. இந்த தொற்று ஏற்பட்ட 4 முதல் 14 நாட்களுக்குள் இதற்கான அறிகுறிகள் தென்படும் என வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள் எச்சரிக்கை
இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 40 முதல் 75 சதவீதம் வரையிலானோர் மரணமடையும் அபாயம் உள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

வௌவால்களின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் மலம் ஆகியவற்றால் அசுத்தமடைந்த பழங்கள், நீர் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளின் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது.
ஆரம்பத்தில் காய்ச்சல், உடல் வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும், நிலைமை தீவிரமடையும் போது சுவாசக் கோளாறுகள் மற்றும் மூளை வீக்கம் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகள் ஏற்படக்கூடும்.
இலங்கையில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும், பொதுமக்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் உணவுகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இலங்கை சுகாதார அமைச்சு நிலைமையை அண்மித்து அவதானித்து வருவதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri