காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் புதுப்பிக்கப்படும் : ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்வாதிகள் மற்றும் வடக்கில் வசிப்பவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வருங்கால ஐக்கிய மக்கள் சக்தி (SIP) அரசாங்கம் காணாமல் போனோர் அலுவலகம் (OMP) மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றை புதுப்பிக்கும் என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன (Eran Wickramaratne) அறிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய விக்ரமரத்ன, ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதில் வடக்கு மக்களது கருத்துக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் ஸ்திரத்தன்மை
ஒருங்கிணைந்த இலங்கையை கட்டியெழுப்ப வடக்கில் உள்ள மக்களின் கருத்துக்கள் முக்கியமானவையாகும்.
சமூக மற்றும் அரசியல் மட்டங்களில் ஒற்றுமையை அடையாமல், பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது. எனவே பொருளாதார வளர்ச்சிக்கு அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில், இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 வீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த இலக்கை அடைவதற்கு சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்து, ஐக்கிய இலங்கையை வளர்ப்பது அவசியமாகும் என்று எரான் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை
இந்நிலையில், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தை புனரமைக்குமாறு சஜித் பிரேமதாசவிடம் வடக்கிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், பிரேமதாசவின் அண்மைய வட மாகாணத்திற்கான சுற்றுப்பயணத்தின் போது, நாட்டிலுள்ள சிங்கள அரசியல் கட்சிகள் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை அல்லது மதிக்கவில்லை என வடபகுதி அரசியல்வாதிகள் பலர் அதிருப்தி தெரிவித்ததை விக்கிரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளன. மாகாண சபைகளின் ஆளுநர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் ஜனாதிபதியினால் நேரடியாக நியமிக்கப்படுகின்றனர்.
எனினும், மையப்படுத்தப்பட்ட நிர்வாக அணுகுமுறை இலங்கையில் சர்வாதிகார ஆட்சி பற்றிய கவலையை எழுப்பியுள்ளது என்றும் வடக்கின் அரசியல்வாதிகள் குற்றம் சுமத்துவதாக எரான் விக்கிரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |