கோவிட் அறிகுறிகளையே மாற்றிவிட்ட ஒமிக்ரோன் : இப்போது காணப்படும் அறிகுறிகள்
ஒமிக்ரோன் வகை கோவிட் வைரஸ், கோவிட் அறிகுறிகளையே மாற்றிவிட்டதாகப் பிரித்தானிய அரசு அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது ஒமிக்ரோன் வகை மரபணு மாற்ற கோவிட் வைரஸ் தொற்றுக்கு ஆளாகுவோருக்கு, டெல்டா வகை கோவிட் வைரஸ் தொற்று அதிகம் காணப்பட்ட முந்தைய மூன்று மாதங்களை ஒப்பிடும்போது, 80 சதவிகிதம் அதிகம், தொண்டை அழற்சி (sore throat) என்னும் அறிகுறி காணப்படுகிறது.
அதே நேரத்தில், வாசனை மற்றும் சுவை இழப்பு என்னும் அறிகுறியோ தற்போது ஒமிக்ரோன் வகை கோவிட் தொற்றுக்கு ஆளாகுவோருக்கு மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
ஆனாலும், மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல், இருமல் ஆகிய கோவிட் வைரசுக்கே உரியதான அறிகுறிகளில் எந்த மாற்றமும் இல்லை. டெல்டா வைரஸ் தொற்றின்போது இருந்தது போலவே, இப்போது ஒமிக்ரோன் வகை கோவிட் வைரஸ் தொற்றுடையோருக்கும் இதே அறிகுறிகளும் தொடர்கின்றன.
பிரித்தானியச் சுகாதார பாதுகாப்பு ஏஜன்சியின் ஆய்வு ஒன்றில், ஒமிக்ரோன் வகை கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட 174,755 பேர் மற்றும் டெல்டா வகை கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட 87,930 பேரின் மருத்துவ அறிக்கைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஆய்வில், ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில் 54 சதவிகிதம் பேர் தொண்டை அழற்சி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், 13 சதவிகிதம் பேர் மட்டுமே வாசனை மற்றும் சுவை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆக, டெல்டா வகை கோவிட் வைரஸ் தொற்றின்போது கோவிட் அறிகுறிகளில் முதல் 10 இடங்களுக்குள் இருந்த வாசனை மற்றும் சுவை இழப்பு என்னும் அறிகுறி, தற்போது ஒமிக்ரோன் வகை கோவிட் தொற்றின்போது 17ஆவது இடத்துக்குச் சென்றுவிட்டது.
ஆனாலும், இன்னமும் மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல், இருமல் ஆகிய கோவிட்
வைரசுக்கே உரியதான அறிகுறிகளில் எந்த மாற்றமும் இல்லை என்பது
குறிப்பிடத்தக்கது.