திருகோணமலையில் விவசாயி ஒருவருக்கு நேர்ந்த கதி - தீவிரப்படுத்தப்படும் விசாரணை
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 6ஆம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(27.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரவெவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள் ஆரம்பம்
வனவிலங்குகளிடமிருந்து தனது விவசாய நிலத்தைப் பாதுகாப்பதற்காக அவரே சட்டவிரோதமான முறையில் இந்த மின்சாரக் கம்பியை இழுத்து மின்சாரம் பாய்ச்சியிருந்தமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனது விவசாய நிலத்துக்குச் சென்ற போது, தான் அமைத்திருந்த மின்சாரக் கம்பியில் எதிர்பாராத விதமாகத் தட்டிப் போனதாலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படுகின்றது.
வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க இவ்வாறான சட்டவிரோத மின்வேலிகளை அமைப்பது ஆபத்தானது மாத்திரமன்றி, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த காலங்களில் இவ்வாறான பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என தெரிவித்த மொரவெவ பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.