வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் : பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2022 (2023)ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், பரீட்சை பெறுபேறு வெளியான மாணவர்கள், மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் காலம் தொடர்பான விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, டிசம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பெறுபேற்று சான்றிதழ்கள்
அனைத்துப் பாடசாலை பரீட்சார்த்திகளின் அச்சிடப்பட்ட பெறுபேறு சான்றிதழ்கள், குறித்த அதிபர்களுக்கும் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் பெறுபேறு சான்றிதழ்கள் பரீட்சார்த்திகளுக்கும் மீள் மதிப்பீட்டுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயன்பாட்டிற்கான பரீட்சை சான்றிதழ்களுக்கு இன்று (01) முதல் இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும், 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை கடந்த மே மாதம் 29ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடத்தப்பட்ட நிலையில், இந்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.
இதில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் 78,103 தனியார் பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |