அரசாங்கமும் அரசாங்க அதிகாரிகளும் நாடகம் நடிக்கின்றார்கள்: கருணாகரம் (Video)
"இந்தத் தேர்தலை வைத்து அரசாங்கமும் அரசாங்க அதிகாரிகளும் நாடகம் நடிக்கின்றார்கள்" எனத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (20.02.2023) மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, தேர்தல் என்பது அரசியலமைப்பின் பிரகாரம் காலத்துக்குக் காலம் நடைபெற வேண்டியது. ஒரு ஜனநாயக நாட்டிலே தேர்தல் ஒரு முக்கியமான ஒரு அங்கமாக இருக்கிறது.
எதிர்வரும் 9ஆம் திகதி நடப்பதாக அறிவிக்கப்பட்ட இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடக்குமா நடக்காதா என்று நூலிலே ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கின்றது.
இந்த அரசு தங்களுடைய வங்குரோத்து அரசியலை இந்தத் தேர்தலிலே காட்டாமல், சிறந்த முறையில் நடத்துவதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
நாங்கள் நினைக்கின்றோம்... அரசாங்கமும் அரசாங்க அதிகாரிகளும் ஒரு நாடகம் நடிக்கின்றார்கள். ஏனென்றால் இன்று இந்த நாட்டில் பொருளாதார சூழ்நிலைபற்றி அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும்.
கடந்த வரவு - செலவுத் திட்டத்திலேயே தேர்தல் செலவுகளுக்காகத் தேர்தல்கள் ஆணையத்துக்கு 10 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தாலும் நாட்டின் பொருளாதார சூழ்நிலையில் அந்தப் பணம் தேர்தல் ஆணையத்திற்கு கிடைக்குமா கிடைக்காதா என்பது தேர்தல் ஆணையத்திற்கும் அதன் தலைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையகம்
தேர்தலை அரசாங்கத்துடன் ஒரு சுமூகமாக நடத்தாமல் தேர்தல் ஆணையாளர் ஏட்டிக்கு போட்டியாகத் தேர்தலில் அறிவித்திருக்கின்றார்.
தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திலே அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலை நடத்துவதற்கு ஆணையைப் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையகம் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற போது மீண்டும் ஒரு தடவை ஆணையிட வேண்டிய தேவை இல்லை என்பதனை கூறி இருந்தார்கள்.
அரசாங்க அச்சகம்
தற்போது இடம்பெறுகின்ற நிலையினை பார்க்கும்போது, தேர்தல் நடைபெறாது போல இருக்கின்றது, ஏனெனில் தபால் மூலமான வாக்கெடுப்பு காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
வாக்கு சீட்டுகளை அச்சு அடிக்கும் அரசாங்க அச்சகம் அதன் அச்சகர் அந்த அச்சகத்திற்குரிய பணம் கொடுக்கப்படவில்லை என ஆரம்பத்திலேயே தேர்தல் ஆணையாளர் கூறியிருந்தார்.
பிறகு அவர் கூறுகின்றார் பாதுகாப்பு தந்தால் நான் அச்சடிக்கும் பணியை தொடர்வேன் என்று.
அத்துடன், அச்சடிக்கும் பணி ஆரம்பித்தால் நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது ஒரு வேடிக்கையான விடயமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.




