சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 6 பாடத்தொகுதி! கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள அதிகாரி
புதிய இணைப்பு
தரம் 6 ஆங்கில பாடத்திட்டம் தொடர்பான சர்ச்சை தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் மேலும் இரு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சர்ச்சைக்குரிய விடயங்களை கொண்ட தரம் 6 ஆங்கில பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தொகுதியை தயாரித்த பொறுப்பான அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு இன்று (19 ஆம் திகதி) முதல் செயற்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடத்தொகுதிகளில் ஏற்பட்ட சிக்கல்
தரம் 6 ஆங்கில தொகுதியில் பொருத்தமற்ற வலைத்தளத்தின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பான உண்மைத்தன்மைகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், இரண்டு அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்தின் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் நேற்று முன்தினம் (17 ஆம் திகதி) நடைபெற்றதுடன், மேலும் அந்த கூட்டத்தில் அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அறிக்கையில் உள்ள சில விடயங்கள் குறித்து ஆராய நிர்வாகக்குழு இந்த வாரம் மீண்டும் கூட உள்ளது.
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை
இருப்பினும், அதற்கு முன்னர், இடைநீக்கம் செய்யும் முடிவு செயல்படுத்தப்படும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாடத்தொகுதிகளில் ஏற்பட்ட சிக்கலுக்கு அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் ஒழுங்கின்மையே காரணம் என்றும் அறிக்கை கூறுகின்றது.
சம்பவம் குறித்து உடனடியாக முறையான விசாரணை தொடங்கப்படும் என்றும், விசாரணைக்குப் பிறகு பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.