மன்னாரில் தேர்தல் விதிகளை மீறும் அரச அலுவலர்கள்: வெளியான அவசர கடிதம்
மன்னார்(Mannar) மாவட்டத்தில் பணியாற்றும் அரச அலுவலர்களில் ஒரு பகுதியினர் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சட்ட முரணான விடயங்களில் ஈடுபட்டிருப்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திணைக்கள தலைவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் உரிமைகளை அனுபவிக்க உரித்துடைய அலுவலர்கள் தகாத செல்வாக்கு மற்றும் இலஞ்சம் போன்ற சட்ட முரணான பழக்கங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவித் தேர்தல் ஆணையாளர்
இதன்படி மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் வே.சிவராஜவினால், மன்னார் மாவட்டத்தில் உள்ள திணைக்கள தலைவர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், “தாபன விதிக்கோவையின் அத்தியாயம் 'XXXII' இன் பிரிவின் 2 இன் கீழ் அரசியல் உரிமையை அனுபவிப்பதற்கு உரித்துடையவர்களான மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அலுவலர்களில் ஒரு பகுதியினர் நாடாளுமன்ற தேர்தல் - 2024 தொடர்பாக சட்ட முரணான பழக்கங்களில் ஈடுபட்டிருப்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன.
அரசியல் பிரசாரங்கள்
குறிப்பாக தமது கடமை நேரங்களில் அரசியல் பிரசாரங்களில் ஈடுபடுதல், தமது கடமை பரப்பெல்லை க்கு உட்பட்ட அலுவலகங்களிலும், கடமையாற்றும் கிராம அலுவலர் பிரிவுகளிலும் தமது சேவை நாடிகளான பொது மக்களிடம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன.
இவ்வாறான கருமங்களில் ஈடுபடும் அலுவலர் ஒருவர் 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 80 (ஆ) உறுப்புரையின் கீழ் தவறொன்றை இழைத் தவராக கருதப்படுவார்.
அலுவலர் ஒருவரின் பதவி வழியாக கடமை அதிகார எல்லை பிரதேசத்தில் அவரால் அரசியல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இவ்வாறான தவறொன்றாக அமையும் என்பது தொடர்பாக தமது நிர்வாகத்தின் கீழ் உள்ள அலுவலர்களுக்கு அறிவூட்டும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |