கிழக்கு மாகாணத்தில் வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் அலுவலகம் திறந்து வைப்பு
வெளிநாட்டில் தொழில் புரிகின்றவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய சகல விடயங்களையும் தீர்த்து வைப்பதற்காக வெளிநாட்டு அமைச்சின் கீழ் இயங்குகின்ற கொன்சியூலர் அலுவலகம் இன்று திருகோணமலை உள்ளகத்துறைமுக வீதியில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குனவர்த்தனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகளின் செயற்றிறனை மேம்படுத்துவதன் மூலமாக´நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை´ என்ற அரசாங்கத்தின் தேசிய கொள்கைக் கட்டமைப்பிற்கு இது செயற்படவுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,
”இந்த கொன்சியூலர் அலுவலகத்தைத் திறந்ததினால் கிழக்கு மாகாணம் மற்றும் அதன் அண்மித்த பகுதிகளில் உள்ள பொது மக்கள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவுக்குச் செல்லாமல் கொன்சியூலர் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுத்துள்ளது.
பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தை நிறுவியதன் மூலம் வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கான பிறப்பு திருமணம், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றை சான்று உறுதிப்படுத்துதல், வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிகளை வழங்குதல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களின் நிவாரணம், இழப்பீட்டுக் கோரிக்கைகளை எளிதாக்குதல் மற்றும் வெளிநாட்டிலிருந்து இறந்த மனித உடல்களை திருப்பிக் கொண்டு வருதல் போன்ற பல கொன்சியூலர் சேவைகளை பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் வெளிநாட்டு இராஜங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கபிலஅத்துக்கோரல, எம்.எஸ்.தௌபீக், சாணக்கியன் இராசமாணிக்கம், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பதி, அரச அதிகாரிகள் வெளிநாட்டு அமைச்சின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.



