ஓட்டமாவடி - மஜ்மாநகர் பகுதியில் 17 ஜனாசாக்கள் நல்லடக்கம்
கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்ற சுகாதார அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு அமைவாக நேற்று இரவு ஏழுமணி வரை 8 ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
கோவிட் தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மாநகரில் அடக்கம் செய்வதற்கு சிபாரிசு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மாத்திரம் கோவிட்டினால் மரணித்தவர்களின் 17 ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று மூலம் மரணித்த ஜனாசாக்களில் நேற்று கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஒன்பது ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் நேற்று நிட்டம்புவ பிரதேசத்தினை சேர்ந்த நான்கு பேர் திகாரி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நாரங்கொடயை சேர்ந்த ஒருவர் கொழும்பை சேர்ந்த ஒருவருமாக எட்டு ஜனாசாக்கள் நேற்று இரவு ஏழு மணிவரை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டமாவடி - மஜ்மாநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 9 ஜனாசாக்களும், நேற்றைய தினத்தில் இரவு ஏழு மணி வரை 8 ஜனாசாக்களும் என 17 ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அடக்கம் செய்யும் பணிகளை தொடர உள்ளதாகவும் களத்தில் செயலாற்றும் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பிரதேசம் தொடர்ந்தும் இராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ளதுடன், ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.