அரச சொத்துகளை ஆக்கிரமிப்பது ஜனநாயகம் அல்ல - ஜனாதிபதி கடும் எச்சரிக்கை
மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தன்னால் வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு கங்காராம விகாரையில் இன்று பிற்பக்ல் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும், இளைஞர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பது போன்று ஏனைய கருத்துக்களுக்கும் செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
அமைதியான போராட்டங்களில் ஈடுபடுவதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் திறமை உள்ள போதும், போராட்டம் என்ற போர்வையில் வீடுகளை எரிப்பதும் பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பதும் ஜனநாயகம் அல்ல எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் சட்டவிரோதமானது எனவும், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
போராடும் இளைஞர்கள் எதிர்காலத்தை கட்டியெழுப்ப விரும்பினால் அவர்களுக்கு பூரண ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைதியான முறையில் தமது கருத்துக்களை வெளியிடும் உரிமை நசுக்கப்பட்டுள்ளதாகவும், தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கான மேடையொன்றை தயாரிக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவர்தான் பிரதமர்
இதேவேளை, புதிய பிரதமர் தொடர்பில் ஊடகவியலாளர்களினால் கேள்வியொன்றும் ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், அரசியலமைப்பின் படி, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவர்தான் பிரதமர் என்று கூறினார்.
தனது கட்சியில் அவர் மாத்திரம் இருப்பதால் பிரதமரை தெரிவு செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஜனாதிபதி பாதுகாப்பு படை உறுப்பினர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு விடயங்களில் கடமையாற்றிய பொலிஸ், ஆயுதப்படை உள்ளிட்ட பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார்.
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.