முல்லைத்தீவு நகரில் மின்சார சபைக்கு முன்னால் உள்ள இடையூறு!
முல்லைத்தீவு நகரில் உள்ள மின்சார சபை அலுவலகத்திற்கு முன்னால் உள்ள இடையூறு தொடர்பில் பொதுமக்கள் தங்கள் விசனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மின்சார சபை அலுவலகத்திற்கு முன்னால் செல்லும் கடற்கரை பிரதான வீதியில் நீர் தேங்கி இருப்பதால் அதனூடாக பயணிப்போர் அதிக இடையூறுகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இரட்டை வழியாக உள்ள அந்த வீதியில் ஒரு வழி முழுமையாக நீர் நிரம்பி தேங்கி கிடக்கின்றது.
மின்சார சபை அலுவலகத்திற்கு செல்லும் பிரதான வாசலில் இது இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
காகங்கள் குளிக்கின்றன
முல்லைத்தீவு நகரின் மத்தியில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் இருந்து கடற்கரை பிரதான வீதி ஆரம்பமாகின்றது.
சுற்றுவட்டப் பாதையின் ஆரம்ப இடத்தில் இருந்து இருபது மீற்றர் தூரத்தில் மின்சார சபை அலுவலகத்திற்கான பிரதான வாசல் இருக்கின்றது.
பத்து மீற்றர் நீளத்திற்கு தேங்கியுள்ள நீர் ஒரு இடத்தில் வீதியின் ஒரு பகுதியை மறித்தவாறும் உள்ளது.
அரை அடி ஆழத்திற்கு உள்ள நீரில் காகங்கள் குளிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
மழைக்கு தேங்கும் இந்த நீர் வடிந்தோட முடியாதவாறு மின்சார சபையினர் வீதியின் ஓரத்தில் மண்ணால் தடையிட்டிருக்கின்றனர். இதனால் வெய்யிலில் ஆவியாகி மட்டுமே இந்த நீர் இல்லாது போகும் துர்ப்பாக்கிய நிலையும் இருப்பதை அவதானிக்கலாம்.
நீர் தெறிக்கும் அசௌகரியம்
வாகனங்கள் அதனூடாக பயணிக்கும் போது பாதசாரிகள் மீது நீர் தெறிக்கும் அசௌகரியங்களையும் அவை ஏற்படுத்துவது தொடர்பில் பயணிகள் அதிக எச்சரிகையோடு பயணிக்க நேர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள், வியாபார நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்கள் இவ்வீதியில் உள்ளன.
மாலை நேரங்களில் கடற்கரைக்கு சென்றுவரும் பொதுமக்களும் இந்த பாதையினையே அதிகம் பயன்படுத்தி வருகிறனர்.
கடற்கரையில் இருந்து இவ்வீதியூடாக சுற்றுவட்டப் பாதைக்கு வரும் மக்கள் மின்சார சபைக்கு முன்னாக உள்ள இந்த நீரினால் தங்கள் பயணத்தடத்தினை விட்டு விலகி உள்நுளைவு வழிக்கு சென்று சுற்றுவட்ட பாதைக்கு ஏறுவதை அவதானிக்கலாம்.
இந்த நிலை இயல்பான போக்குவரத்துக்கு பொருத்தமற்ற அணுகுமுறையாகும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
சமூக ஆர்வலர்கள்
மின்சார சபைக்கு முன்னால் கடற்கரை நோக்கிய திசையில் வலதுபக்கம் பாதசாரிகள் நடந்து செல்வதை இந்த நீர் தேங்கியிருப்பது தடைசெய்தவாறே இருக்கின்றது.
கோடை மாரி என்ற பேதமின்றி மழை பொழியும் எல்லா சந்தர்ப்பங்களிலும் நீர் தேங்கினால் அவை வெய்யிலில் காய்ந்து போகும் வரை தேங்கியிருப்பதை கவனிக்காது இருப்பது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலர் சுட்டிக் காட்டியும் இதுவரையிலும் அதற்கொரு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுவதையும் இங்கே நோக்கலாம்.
முல்லைத்தீவு நகரின் பல இடங்களிலும் இவ்வாறான இடையூறை ஏற்படுத்தும் வகையில் நீர் தேங்கியிருப்பதை அவதானிக்கலாம்.
நகரில் பொதுமக்களிற்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில் இவை தொடர்பில் உரிய பொறுப்பு வாய்ந்தோர் கருத்திலெடுத்து மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரியிருப்பதையும் இங்கே சுட்டிக் காட்டுதல் பொருத்தமானதாகும்.