வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் இப்ராஹிம் ரைசிக்கு இரங்கல்
கொழும்பில் (Colombo) உள்ள ஈரான் (Iran) தூதரகத்திற்கு இன்று (23.05.2024) சென்ற வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திரகுமார் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அசர்பைஜான் எல்லையில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்ட எட்டு அரச அதிகாரிகள் உயிரிழந்தனர்.
ரைசியின் இழப்பு பாரிய நட்டம்
இந்நிலையில், ஈரான் ஜனாதிபதியின் மறைவு குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த நினைவுக்குறிப்பேட்டில் ரகு இந்திரகுமார் தனது இரங்கல் குறிப்பை பதிவிட்டுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட பலரின் திடீர் உயிரிழப்பு தொடர்பில் நாம் மிகுந்த மன வேதனையடைவதாகவும், விசேடமாக இலங்கைக்கும் எம்மோடு தொடர்புடைய பிராந்தியத்துக்கும் அவர்களின் இழப்பு பாரிய நட்டமாகும் என்றும் ஈரான் தூதுவரிடம் வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் கூறியுள்ளார்.
மேலும், ஈரானும் இலங்கையும் நெடுகாலமாக நட்போடு திகழ்வதுடன் இலங்கையின் அபிவிருத்திக்கு ரைசி பல ஒத்துழைப்புகளை நல்கியுள்ளார்.
விசேடமாக உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்கு ஈரான் அரசாங்கம் நிதியுதவி வழங்கியதை நாம் ஒருபோதும் மறந்து விட மாட்டோம் என ரகு இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.