நுவரெலியா - தலவாக்கலை வீதி தாழிறக்கம்: சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடுமையான மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையை தொடர்ந்து, தலவாக்கலை (ஏ7) பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு சந்திக்கு அருகில் வீதி நடுவில் தாழிறங்கியுள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதியில் வழியாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இதற்கு முன்னரும் அதே இடத்தில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மலையகத்தில் தொடர் சீரற்ற காலநிலையால் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பல இடங்களிலும் சிறிய மண்சரிவுகள், பிரதான வீதியில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளான வீதியினை சீரமைக்கும் வரை அந்த வழியில் செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கனரக வாகனங்கள் அந்த வீதியின் வழியாக செலுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த பகுதி மேலும் தாழிறங்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக மலையகத்தில் தொடர்ந்து, பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே மண் திட்டுகள் சரிவுகள், நிலம் தாழிறக்கம் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனால் பொது மக்களை அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னால் வீதி தாழிறக்கம் அல்லது குழிவான பள்ளம் உள்ளதை எச்சரிக்கும் அபாய எச்சரிக்கை வீதிச் சமிக்ஞைகள் ஏதும் இல்லாததால் குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வேகத்தை கட்டுபடுத்துவது அவசியமாகும். இல்லையெனின், வாகனம் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளாக வாய்ப்பு உள்ளதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

