அணு குண்டால் ஜப்பானுக்கு ஏற்பட்ட அழிவுக்கு இணையான பொருளாதார அழிவு இலங்கைக்கு ஏற்படலாம்:விஜேவர்தன
இலங்கை பெற்றுக்கொண்ட கடனை திரும்ப செலுத்துமாறு கோரி ஹெமில்டன் ரிசர்வ் வங்கி, அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளமை இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டப்ளியூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
முழு கடனை திரும்ப செலுத்துமாறு கோரும் அமெரிக்க ரிசர்வ் வங்கி
ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணை முறி தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில் 250 மில்லியன் டொலர்களை அமெரிக்காவின் ரிசர்வ் வங்கி முதலீடு செய்துள்ளது. இந்த வங்கி இலங்கைக்கு எதிராக நியூயோர்க்கில் உள்ள சமஷ்டி நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளது.
முழு தொகையையும் செலுத்துமாறு இலங்கை உத்தரவிடுமாறு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடனை திரும்ப செலுத்துவதை ஒத்திவைப்பதாகவும் நிறுத்துவதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இலங்கை பெற்ற கடன் தொடர்பில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கடன் வழங்கியவர்களில் 25 வீதமான தரப்பினர் தமது கடனை திரும்ப செலுத்துமாறு கோரியுள்ளனர்.
இதனால், மீதமுள்ள 75 வீதத்தினர் கடன் மறுசீரமைப்புக்கு இணங்க முடியாத நிலைமை உருவாகும்.
இலங்கையின் பொருளாதாரம் எதிர்பாராத நேரத்தில் நின்று போகலாம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி எதிர்காலத்தில் மேலும் மோசமடையலாம். இலங்கையின் பொருளாதாரம் நினைத்து பார்க்காத நேரத்தில் நின்று போகலாம்.
ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணு குண்டு போடப்பட்டதால், ஜப்பானுக்கு ஏற்பட்ட அழிவுக்கு இணையான பொருளாதார அழிவு இலங்கைக்கு ஏற்படும்.
அனைத்து மக்களின் அர்ப்பணிப்புடன் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழ சுமார் 10 ஆண்டுகள் வரை செல்லும் எனவும் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.