ரியான்ஏர் விமான பயணத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு! புலனாய்வாளர்கள் வெளியிட்ட காரணம்
கடந்த மாதம் ரியான்ஏர் விமானப் பயணத்தின் போது உடைந்த என்ஜின் விசிறி பிளேடில் உலோக சோர்வுக்கான ஆதாரங்களை அமெரிக்க விமான பாதுகாப்பு புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதன்போது, விமானத்தின் உள்ளே பாகங்கள் சிதறி, ஜன்னலை உடைத்துள்ளன. அந்த ஜன்னலின் திறப்பிற்குள் பயணி ஒருவர் சிக்கியுள்ளார். இதனையடுத்து விமானத்திற்குள் இருந்த மருத்துவர் ஒருவர் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம்
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) தனது பூர்வாங்க அறிக்கையில், உடைந்த பிளேடின் பரப்பில் சுமார் 37 சதவீதம், சோர்வுடன் ஒத்துப்போகும் அம்சங்களை காட்டியதாக கூறியுள்ளது.
புலனாய்வாளர்கள், பிளேடின் அடிப்பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் சேதத்தைக் கண்டறிந்துள்ளதுடன் தொடர்ச்சியான அழுத்தத்தால் ஏற்பட்ட உயர்-வீச்சு சோர்வின் அறிகுறிகள கண்டறிந்துள்ளனர்.

இந்த செயலிழப்பிற்கான மூல காரணத்தை அந்த அமைப்பு இன்னும் கண்டறியவில்லை. ஜூலை 10 அன்று நடந்த இந்த சம்பவம், ரியான்ஏரின் துணை நிறுவனமான மால்டா ஏர் இயக்கிய போயிங் 737-800 விமானத்தில் நிகழ்ந்துள்ளது.
இந்த விமானம் கிரீஸின் தெசலோனிகியிலிருந்து ஜெர்மனி - மெம்மிங்கனுக்கு பயணித்துக் கொண்டிருந்தது. NTSBஇன் தகவலின்படி, விமானம் 16,000 அடி (4,877 மீட்டர்) உயரத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது, விமானிகளுக்கு வலது இன்ஜினில் இருந்து அதிகளவான அதிர்வு வந்துள்ளது.
உடைந்த இன்ஜினின் துண்டுகள்
அதிர்வு வேகமாக அதிகரித்த பிறகு, விமானக் குழுவினர் ஒரு பெரிய வெடிச்சத்தத்தைக் கேட்டுள்ளனர். இதனையடுத்து கேபினில் அழுத்தம் குறைந்துள்ளது.
இன்ஜினின் துண்டுகள் விமானத்தின் உடற்பகுதியில் மோதி கேபினுக்குள் புகுந்து, 11ஆவது வரிசையில் இருந்த ஜன்னலை உடைத்துள்ளன.

உதவிக்கான அழைப்புகளுக்கு பதிலளித்த ஒரு விமானப் பணிப்பெண், 11F இருக்கையில் இருந்த 61 வயது பயணி ஒருவர், உடைந்த ஜன்னல் திறப்பில் பாதியளவு சிக்கியிருப்பதைக் கண்டுள்ளார்.
பயணிகள் அந்த நபரை மீண்டும் உள்ளே இழுத்து வந்துள்ளனர். அந்தப் பயணிக்கு கழுத்து மற்றும் தோள்பட்டையில் காயங்களும், உராய்வினால் ஏற்பட்ட தீக்காயங்களும் ஏற்பட்டிருந்தன.
பறவைகளின் இறகுகள்
விமானம் தெசலோனிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த ஒரு மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
அத்துடன் பயணிகள் சமையலறையில் இருந்த ஒரு உலோகப் பெட்டியை கொண்டு அந்தத் திறப்பை அடைக்க முயன்றனர். விசாரணையாளர்கள் இன்ஜினின் பல பகுதிகளில் இறகுகளையும் பறவையின் எச்சங்களையும் கண்டறிந்துள்ளனர், ஆனால் பறவை மோதியதால் பிளேடு உடைந்ததா என்பதை NTSB இன்னும் உறுதி செய்யவில்லை.

பராமரிப்பு பதிவுகளின்படி, கடந்த ஆண்டில் இந்த இயந்திரம் நான்கு முறை பறவைகளால் மோதப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அவற்றில் இரண்டு மோதல்களுக்குப் பிறகு பறவைகளின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 2025 மற்றும் மே 2026 இல் இயந்திரத்தின் விசிறி இறக்கைகளுக்கு மீயொலி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் எந்த சேதமும் கண்டறியப்படவில்லை என்றாலும் NTSB-யின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.