நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற நிலையை அரசாங்கம் இல்லாதொழித்துள்ளது
நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற நிலையை அரசாங்கம் முற்றாக இல்லாதொழித்துள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சமூகச் சீரழிவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் பாதுகாப்பற்ற நிலைமை முற்றாக ஒழிப்பதில் தற்போதைய அரசாங்கம் வெற்றியடைந்துள்ளதாக நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய பாதகமான சூழ்நிலைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பின்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும், அதனை தற்காலிகமாகவோ அல்லது நிறுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பயணம் முன்னோக்கியே செல்லும், ஒரு கணமேனும் தற்காலிகமாக நிறுத்தக்கூடிய ஒரு முற்றுப்புள்ளி, அல்லது ஒரு கால்புள்ளியை வைக்கக்கூடிய மட்டத்தில் நாடு இப்போது இல்லை என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்தி, மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதுள்ள சாதகமான நிலையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அமைச்சர் சரோஜா போல்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.