என்.பிபியின் எழுச்சி ஒருங்கிணைந்த தமிழர் அரசியலின் முக்கியத்துவத்தை கஜேந்திரகுமாருக்கு உணர்த்தியிருக்கிறது..!
தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியானது தமிழ் தேசிய அரசியலில் தனித்து ஓடியவர்களுக்கு தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த அரசியலின் ஒருங்கிணைந்த அசரியலின் முக்கியத்துவத்தை உண்ர்தியிருக்கிறது என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் விரிவுரையாளருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து விட்டது.
வேட்பு மனுக்கள்
சில சபைகளுக்கு மட்டும் திகதி பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல் மே 6ம் திகதி இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல கட்சிகளினதும் , சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இளைஞர்கள் என நிரூபிப்பதற்கான பிறப்புச்சாட்சிப்பத்திரம் சமர்ப்பிக்காததினால் தான் அதிக வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மட்டும் 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கட்சிகளின் 22 வேட்பு மனுக்களும், சுயேட்சைக் குழுக்களின் 13 வேட்பு மனுக்களும் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெருவாரியான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான இக்கட்சியின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் இது தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்பு மனுக்களில் தமிழ் மக்கள் கூட்டணி , அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு என்பனவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அகில இலங்கைத்தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பு மனுக்களும் நல்லூர் பிரதேச சபையிலும், பருத்தித்துறை பிரதேச சபையிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தென்னிலங்கையிலும் பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் வேட்பு மனுக்கள் மஸ்கேலியா பிரதேசபையிலும், கொத்மலை பிரதேசபையிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கபிலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அகில இலங்கைத்தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் திலீசனை அறிவித்துள்ளது.
தமிழரசுக்கட்சி மேயர் வேட்பாளராக எவரையும் அறிவிக்கவில்லை. நகரசபைத் தலைவர்கள் , பிரதேச சபைத் தலைவர்களுக்கான வேட்பாளர் பெயர்களையும் அறிவிக்கவில்லை.
தேர்தல் முடிந்த பின்னர் அது பற்றி தீர்மானிக்கப்படும் என கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் கூறியுள்ளார்.
தமிழ்க்கட்சிகளிடம் கிராமியமட்ட கட்டமைப்புகள் இல்லாததினால் வேட்பாளர்களைத் தேடுவதில் பலத்த சங்கடங்களை அனுபவித்துள்ளன. பெண்களையும், இளைஞர்களையும் தேடுவதிலேயே இச்சங்கடங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழரசுக்கட்யிலும் இச்சங்கடங்கள் ஏற்பட்டதாக பேசப்படுகின்றது.
கூட்டணிக்கட்சிகளுக்கு இச்சங்கடங்கள் குறைவாக இருந்திருக்கலாம். அதிலுள்ள கட்சிகளும் வெறும் பெயர்ப்பலகையை கட்சிகளாக இருந்திருக்கின்றனவே தவிர கிராமிய கட்டமைப்புகளை கொண்டனவாக இல்லை.
சென்ற வாரம் தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்பவற்றின் யதார்த்த நிலை பார்க்கப்பட்டது.
இந்த வாரம் ஏனைய கட்சிகளைப் பார்ப்போம்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் காட்டில் இந்தத் தடவை கொஞ்சம் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கூட்டணி அமைத்து போட்டியிடுவதே இதற்கு காரணம். தமிழ்த் தேசிய பேரவை என்ற பெயரில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் அவை போட்டியிடுகின்றன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிறீகாந்தாவின் தமிழ்த்தேசிய கட்சி , தவராசாவின் ஜனநாயக தமிழரசுக்கட்சி ஐங்கரநேசனின் தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் , அருந்தவபாலனின் குழு என்பவை இணைந்தே ஐக்கிய முன்னணியாக போட்டியிடுகின்றன.
இதில் இணைந்துள்ள தரப்புகள் பெரியளவிற்கு அம்பலப்பட்ட தரப்புகளாக இல்லாதபடியால் தமிழ்த்தேசிய கட்சிகள் இக் கூட்டணிக்கு ஆதரவளிக்கு முற்படலாம்.
சிறீகாந்தாவின் தமிழ்த் தேசியக் கட்சியை ஏற்கனவே ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது கூட்டிலிருந்து நீக்கப் போவதாக செய்திகள் வந்திருந்தன.
அதற்கு முன்னரே சிறீகாந்தாவின் கட்சி வெளியேறியுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியுடனும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனுமே கூட்டணி அமைக்கவே முற்பட்டது.
புதிய அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்டு இக் கூட்டணியமைக்க முயற்சிக்கப்பட்டது. தமிழரசுக்கட்சி புதிய அரசியமைப்பு இப்போது சாத்தியமில்லை எனக் கூறி நழுவியிருந்தது.
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தென்னிலங்கை கட்சிகளோடு இணைந்து செயற்பட்ட சந்திரகுமாரின் சமத்துவக்கட்சியை கூட்டமைப்பில் இணைத்ததினாலும், செல்வம் அடைக்கலநாதன் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததினாலும் ஐக்கியத்திற்கான பேச்சுவார்த்தை வளரவில்லை. செல்வம் அடைக்கலநாதன் சுமந்திரனுடன் நெருக்கமாக இருப்பதும் பேச்சுவார்த்தை தொடரமைக்கு காரணமாக இருக்கலாம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு கொள்கை ரீதியாக செயல்படும் கட்சி என்ற பெயருண்டு. அதனால் தான் மக்கள் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும், நூற்றுக்கணக்கான உள்ளூராட்சி சபை உறுப்பினர்களையும், கடந்த காலங்களில் வழங்கியிருந்தனர்.
கட்சி அவற்றை முதலீடாகக் கொண்டு கட்சியை பலப்படுத்தும் பணி எவற்றையும் மேற்கொள்ளவில்லை. மறுபக்கத்தில் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பதற்கு பதிலாக கட்சி அரசியலையே முன்னெடுத்திருந்தது.
இதனால் நெருக்கடியான காலங்களில் கட்சியில் செயல்பட்டிருந்த பலர் கட்சியை விட்டு வெளியேறினர். வடமராட்சி கிழக்கு முரளிதரன் , காண்டீபன், வவுனியா கஜேந்திரகுமார் என்போர் இதில் முக்கியமானவர்கள். கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்த மணிவண்ணனின் வெளியேற்றமும் கட்சியை வெகுவாகப்பாதித்திருந்தது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை கட்சி நிராகரித்தமையும் தமிழ்த்தேசிய சக்திகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
முன்னர் இவர்களது தமிழ்த் தேசியப் பேரவையில் இணைந்திருந்த தமிழ் சிவில் அமைப்புகளும் கட்சியை விட்டு விலகியிருந்தன. விளைவு கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் கட்சி வாக்கு வங்கி சரி அரைவாசியாக கீழிறங்கியது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்படும் போது தமிழ்க்காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும், விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த தமிழ்த்தேசிய சக்திகளும் இணைந்தே உருவாக்கியிருந்தனர்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை கட்சியாக பதிவு செய்யும் முயற்சி எதுவும் இடம்பெறவில்லை. இதற்கு காரணமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஒரு அரசியல் கட்சியாக அல்லாது ஒரு அரசியல் இயக்கமாகவே இருக்கும் என கூறப்பட்டது.
2009 ஆம் ஆண்டு சம்பந்தன் தலைமை பாரம்பரிய அரசியலைக் கைவிட்டு இணக்க அரசியலுக்கு சென்றமையினாலேயே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டது.
இந்த வகையில் இது ஒரு முற்போக்கான முயற்சியாகவே இருந்தது. தமிழ்த்தேசிய அரசியலை தக்க வைப்பதில் இதன் பங்கினை குறைத்து மதிப்பிட முடியாது.
இதன் வளர்ச்சி நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாரிய பங்கினை ஆற்றியிருந்தது.
இறுதியில் கட்சி அரசியல் காரணமாக அதன் சிதைவுக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியே மூல காரணமாகியது. இன்னோர் மாற்று முயற்சியாகவே 2024 ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
கட்சி அரசியல் காரணமாக அதனுடன் இணையவும் முன்னணி முன் வரவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல்
அன்று முன்னணி இணைந்திருந்தால் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு பாரிய அரசியல் இயக்கமாக வளர்ச்சியடைந்திருக்கும். கட்சி அரசியலும் தீண்டாமை உணர்வும், முன்னணியிடம் மேலோங்கியிருந்தது.
முன்னணியின் இந்த போக்கினால் தமிழ் தேசிய அரசியலினால் ஒரு வலுவான கட்டுறுதியான அரசியல் தலைமையை உருவாக்க முடியவில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் இந்தப்போக்கில் தலைகீழான மாற்றத்தை உருவாக்கியது. தமது கடந்த காலப்பாதையில் தொடர்ந்து செல்ல முடியாது என்ற உண்மை முன்னணிக்கு புலப்படத் தொடங்கியது. தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியும் முன்னணிக்கு யதார்த்த நிலையை எடுத்துக்காட்டியது.
நாடாளுமன்றத் தேர்தலில் பின்னடைவு தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி இரண்டும் சேர்ந்து புதிய சிந்தனையை முன்னணியிடம் உருவாக்கியது. இந்த சிந்தனைக்கு தேர்தல் பின்னடைவு மட்டும் காரணமாக இருக்கவில்லை. தமிழ்த்தேசிய அரசியல் பலவீனமடையப்போகின்றது என்ற எச்சரிக்கை உணர்வும் காரணமாகியது.
ஒருங்கிணைந்த அரசியலை நீண்ட காலமாக நிராகரித்து வந்த முன்னணி ஒருங்கிணைந்த அரசியலுக்கு வந்த கதை இது தான். முன்னணியின் புதிய கூட்டணி நெகிழ்ச்சியான கூட்டணியாகவே தற்போது உள்ளது.
வேட்பாளர் பட்டியல் சண்டை எதுவும் அங்கு பெரிதாக இருக்கவில்லை. தலைவர்கள் வலுவான புரிந்துணர்வுடன் செயற்பட்டிருந்தனர், இந்த ஒருங்கிணைவு அரசியல் வாக்கு வங்கியை அதிகரிக்குமா? என்பதை தற்போதைக்கு உறுதியாக கூற முடியாது.
கிடைத்த கால அவகாசமும் வாக்கு சேகரிப்புக்கு போதியதாக இல்லை. புதிய கூட்டணி பிரச்சாரங்களை எவ்வாறு முன்னெடுக்கப் போகிறது என்பதிலேயே இது தங்கி உள்ளது. எனினும் இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கலாம்.
எதிர்காலத்தில் கொள்கை ரீதியாக செயற்படும் சிவில் அமைப்புகளையும் இணைத்து பாரிய அரசியல் இயக்கத்திற்கு முன்னேறினால் வளர்ச்சிக்கு இடமுண்டு. தேசிய மக்கள் சக்தி இதற்கு நல்ல உதாரணம்.
அது 22 சிவில் அமைப்புகளையும் இணைத்து வளர்ந்திருந்ததினாலேயே பேரெழுச்சி கண்டுள்ளது. உண்மையில் இது விடயத்தில் தேசிய மக்கள் சக்திக்கே தமிழ்த்தேசிய சக்திகள் நன்றி கூற வேண்டும். அதன் எழுச்சி வந்திருக்காவிட்டால் இக் கூட்டணி உருவாகி இருக்காது.
தவிர இந்தக் கூட்டு முயற்சிகள் எல்லாம் யாழ்ப்பாண மாவட்டத்திற்குள்ளேயே உள்ளன.
ஏனைய மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்படவில்லை. வன்னி தேர்தல் மாவட்டத்தில் முன்னணிக்கு பெரிய செல்வாக்கு கிடையாது.
ஜனநாயகத் தமிழரசு கட்சிக்கு சிறிய செல்வாக்கு இருக்கலாம். சுமந்திரன் தலைமையில் அதிர்ப்தியடைந்த தமிழரசுக்கட்சிக்காரர் இதனுடன் இணைய முற்படலாம்.
ஜனநாயக தமிழரசு கட்சியும் தேர்தல் கால கட்சியாக இருக்கின்றதே தவிர செயற்படும் கட்சியாக இல்லை. கிழக்கில் சமூக கட்டமைப்பு வேறு மாதிரியாக உள்ளது.
தமிழரசுக்கட்சி
அங்கு தமிழரசுக்கட்சியை உடனடியாக பலவீனப்படுத்துவது கடினம். தமிழரசுக்கட்சிக்கு பெரும் போட்டியாளனாக இருக்க வேண்டும் என்பதற்காக பிள்ளையானின் கட்சியும், வியாழேந்திரனின் கட்சியும் இணைந்து கிழக்கு தமிழ்க்கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.
அது வளருமா? என்பதை தற்போதைக்கு உறுதியாக கூற முடியாது. இக்கட்சிகளின் செயல்பாடு. மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே உள்ளது.
அம்பாறை மாவட்டத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும், பெரிதாக இல்லை. முஸ்லீம் எதிர்ப்பும் , வடக்கு எதிர்ப்புமே இக் கட்சிகளின் கொள்கை மூலதனம். இந்த மூலதனத்தை அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் பெரிதாக விற்க முடியாது. அம்பாறை மாவட்டத்திலும் , திருகோணமலை மாவட்டத்திலும், தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவதே பெரிய பிரச்சனையாக உள்ளது.
வடக்கு - கிழக்கு இணைந்த அரசியலுக்கூடாகத்தான் அங்கு தமிழ் மக்களின் இருப்பை காப்பாற்றலாம் என்ற நிலையும் உள்ளது. தவிர பிள்ளையானின் கட்சியினதும், வியாழேந்திரனது கட்சியினதும் இலக்கு இணக்க அரசியல் தான்.
தேசிய மக்கள் சக்தியின் எழுச்சிக்கு பிறகு இந்த இணக்க அரசியல் பலவீனமடைந்துள்ளது. இணக்க அரசியலின் பலன்களை தேசிய மக்கள் சக்திக்கூடாக பெறக்கூடிய நிலை இருக்கும் போது முகவர் அரசியலை மக்கள் பெரிதாக விரும்ப மாட்டார்கள். கிழக்கில் முஸ்லீம் தரப்பின் மேலாதிக்க அரசியலும் தற்போது பலவீனமடைந்துள்ளது.
இதனால் முஸ்லீம் எதிர்ப்பு அரசியலுக்கான வாய்ப்புகளும் குறைவாக உள்ளது என கூறலாம். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நிலைதான் மிகவும் சோகத்திற்குரியது.
கட்சியில் இருந்த பலரும் தேசிய மக்கள் சக்தியோடு தான் தற்போது இணைந்துள்ளனர். உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் பலர் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளராகவும் உள்ளனர்.
கண்ணுக்கு முன்னாலேயே உதிர்ந்து கொண்டிருக்கும் கட்சி என அதனைக் கூறலாம். ஒரு காலத்தில் குடா நாட்டின் அடித்தள மக்கள் மத்தியில் அசைக்க முடியாத செல்வாக்குடன் இருந்த கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அடித்தள மக்களுக்கு ஒரு சமூக அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த கட்சி என்றும் புகழப்பட்டிருந்தது.
சலுகை அரசியலுக்கு எப்போதும் உள்ள ஆபத்து இதுதான் . சலுகை அரசியலை தொடர்ச்சியாக செய்ய முடியாத போது அல்லது இன்னோர் தரப்பு அதனை முன்னெடுக்கும் போது கட்சி பலவீனமடைய கூடிய சூழல் ஏற்படும். அங்கையன் இராமநாதன், விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்களுக்கும் இந்த நிலை தான் ஏற்பட்டுள்ளது.
கடந்த தேர்தலுக்கு முதல் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிக கூடிய விருப்பு வாக்குகளை பெற்ற அங்கையன் இராமநாதன் தற்போது காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர் வெற்றி பெற்ற தொகுதிகளில் எல்லாம் கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
விஜயகலா மகேஸ்வரனின் நிலை கடந்த இரு தேர்தல்களிலும் வீழ்ச்சியையே கண்டிருந்தது. இவர்கள் இருவரும் தற்போது காலாவதியாகியுள்ள அரசியல்வாதிகள் என்ற நிலைக்கு வந்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 10 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது இது குறைவானது எனலாம். 13 சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையும் குறைவுக்கு காரணம் எனலாம். உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளை தனிப்பட்ட நபர்களின் செல்வாக்கும் தீர்மானிப்பதால் சுயேச்சை குழுக்களிலிருந்தும் பலர் தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
முன்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து இருந்த வடமராட்சியைச் சேர்ந்த முரளிதரன், கிரிசாந், ஜீவராணி காண்டீபன் போன்றவர்கள் பருத்தித்துறை பிரதேச சபையில் சுயேட்சைக்குழுவாக போட்டியிடுகின்றனர்.
அங்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையினால் முன்னணி ஆதரவு வாக்குகள் இந்த சுயேட்சைக்குழுவுக்கு கிடைக்கலாம்.
அடுத்த வாரம் தேசிய மக்கள் சக்தியின் நிலை பற்றி பார்ப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
