யாழில் தவிசாளர்களை புறக்கணித்து வரும் அநுர தரப்பு.. பலர் விசனம்!
கடந்த மாதம், மறுமலர்ச்சிக்கான பாதை திட்டத்தின் கீழ், காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வேளை அவ்விடத்திற்கு தவிசாளர் வருகை தந்த போதிலும், நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் தவிசாளரை புறக்கணித்துள்ளனர்.
அந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீபவானந்தராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அதே போன்று கடந்த வாரம் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயளர் பிரிவுக்கான புதிய கட்டிட திறப்பு விழாவில் வேலணை பிரதேச சபை தவிசாளர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
அந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடற்தொழில் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீபவானந்தராசா, க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இட ஒதுக்கீடுகள்
இந்நிலையில், யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் துறவற நூற்றாண்டு விழா இன்றைய தினம் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
அதனால் குறித்த நிகழ்வை புறக்கணித்து மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளரும், உறுப்பினர்களும் நிகழ்வில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அதேவேளை யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும், தவிசாளர்களுக்கு இட ஒதுக்கீடுகள் உரிய முறையில் ஒதுக்கப்பட்டவில்லை. இந்த தொடர்பில் கூட்டத்தில் விசனம் தெரிவித்த போது, அடுத்த கூட்டத்தில் உரிய இட ஒதுக்கீடு செய்து தருவதாக ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்திருந்தார்.
பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், நிகழ்வுகளில் அப்பிரதேச தவிசாளர்களை புறக்கணித்து மத்திய அரசாங்கம் நேரடியாக தலையீடு செய்வது தொடர்பில் கடும் விசனம் எழுந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




