பெரிய திட்டங்களை செய்ய முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்
இந்த அரசாங்கத்தினால் பெரிய திட்டங்களை முன்னெடுக்க முடியாது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கல்வி மறுசீரமைப்பு போன்ற பாரிய திட்டங்களை இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
உப்பு கைத்தொழில், சதொச மற்றும் சிறு கைத்தொழில்களை மேம்படுத்த முடியாத அரசாங்கம் எவ்வாறு பாரிய திட்டங்களை முன்னெடுக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அரசாங்கத்தில் பாரிய திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய திறன் கொண்டவர்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
உத்தேச கல்வி மறுசீரமைப்பில் வரலாறு, அழகியல், தொழில்நுட்பம், இரண்டாம் மொழி, இலக்கியம் போன்ற பாடங்களை விருப்பத் தெரிவு பாடங்களாக உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்வதன் மூலம் மாணவர்கள் தொழில் சந்தையை முன்னிலைப்படுத்தி தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்களுக்கு முன்னுரிமை அளிப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் எதிர்காலத்தில் பண்புசார் மனிதர்களை விட தொழில்நுட்ப ரோபோக்களாக எதிர்கால தலைமுறையினர் உருவாவார்கள் என சம்பிக்க ரணவக்க வருத்தம் வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்த போது நடமாடும் நூலகங்களைப் போன்று தங்களை காண்பித்துக் கொண்டவர்கள் எவ்வளவு சிறிய மனிதர்கள் என்பது வெளிப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




