இந்த அரசாங்கம் வரிகளை மேலும் அதிகரிக்கும்: உதய கம்மன்பில
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வரிகளை மேலும் அதிகரிக்கும் என பிவித்துரு ஹெல உரிமைய கட்சியின் தலைவர் உதயகமன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலைகளை குறைப்பதாக கூறி ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தற்பொழுது அமுலில் உள்ள வரிகளை அதே விதத்தில் பேணும் எனவும் புதிதாக சொத்து வரிகளை விதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முதல் வரவு செலவுத் திட்டம்
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளவில் அரசாங்கம் தனது முதல் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் அடிப்படையில் அரச வருமானங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15 வீதம் வரையில் அதிகரிக்க வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதாவது பொருட்களின் விலைகளை குறைப்பதாக கூறி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் தற்போது நடைமுறையில் உள்ள வரிகளை அதே விதத்தில் பேணுவதுடன் மேலும் வரிகளை விதிக்க நேரிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றி அமைக்க யோசனை முன்வைத்த போதிலும் அதனை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பாதகமான நிபந்தனைகள் காணப்படும் சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைகளில் இருந்து 16 தடவைகள் கடந்த அரசாங்கங்கள் விலகிக் கொண்டுள்ளன
எனினும் தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு செய்ய முடியாது எனவும் ஏனெனில் இலங்கையின் கடன் கொடுநர்களை சர்வதேச நாணய நிதியம் பொறுப்பு சொல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளின் பிரகாரம் நிவாரணங்கள் வழங்கப்படாவிட்டால் மக்களை ஏமாற்றியதாக மக்கள் கோபித்துக் கொள்வார்கள் எனவும் இதனால் அரசியல் நெருக்கடி நிலை உருவாகும் எனவும் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |