அரச செலவில் ஹெலிகொப்டரில் அழைத்து வரப்பட்ட மதத்தலைவர்.. அநுரவை எச்சரிக்கும் பௌத்த துறவி
தற்போதைய அரசாங்கம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்வதில் புத்திசாலித்தனமாகவும் அரசியல் முதிர்ச்சியுடனும் செயல்பட வேண்டும் என்று ஸ்ரீ சமந்தபத்ர தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு தாங்கள் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்த போதிலும், அரசாங்கம் அதைச் செய்யத் தவறி அகங்காரத்துடன் நடந்துகொண்டதால் தேவையற்ற சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று தாங்கள் கடுமையாகப் போராடியபோதே இந்த விவகாரத்திற்குத் தீர்வு கண்டிருந்தால் பிரச்சினை அங்கேயே முடிந்திருக்கும், அரசாங்கத்தின் இந்த அலட்சியப்போக்கே இப்போது இதை ஒரு தீவிர போராட்டமாக மாற்றியுள்ளது.
ஞானசாரர் விவகாரம்..
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்துப் பேசும் அரசாங்கம், இந்தியாவில் இருந்து வரும் மதத் தலைவர்களை அரச செலவில் ஹெலிகொப்டரில் அனுராதபுரத்திற்கு அழைத்துச் செல்வதை மட்டுமே செய்கிறதே தவிர, உண்மையான சுற்றுலா மேம்பாட்டுக்கான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கவில்லை.

தற்போது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் அடிப்படை வசதிகள் இன்றி வரும் ஹிப்பிகளாகவே உள்ளனர், அதேவேளையில் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற யானை கொல்லப்பட்ட சம்பவம் போன்றவற்றைச் சரியாகக் கையாளத் தவறிய அரசாங்கம், சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கவில்லை.
அரசாங்கம் மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்து அடக்க முயன்றால், இலங்கை மக்கள் அந்தத் தடைகளை உடைத்துக்கொண்டு தங்களுக்கு விருப்பமான வழியில் சென்றுவிடுவார்கள்.
விஹாரமகா தேவி பூங்காவில் போராட்டம் நடந்தபோது, அரசாங்கமே அதற்கு எதிராக மற்றொரு போராட்டத்தை நடத்தியது அதன் பயத்தையும் பலவீனத்தையுமே காட்டுகிறது.
சிக்கலில் அரசாங்கம்..
மக்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதை விடுத்து, ஜனநாயகத்தை மதித்து மக்கள் தங்கள் கருத்துக்களையும் விரக்தியையும் வெளிப்படுத்தச் சுதந்திரம் அளிக்க வேண்டும், அடக்குமுறைகள் தொடர்ந்தால் மக்கள் தீவிரமான வழிகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்ற பல நிஜமான பிரச்சினைகளால் மக்கள் ஒரு வேளை உணவிற்கே அல்லல்படும் சூழல் நிலவுகிறது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பலத்த பாதுகாப்புப் பரிவாரங்களுக்கு மத்தியில் கை அசைத்தபடி செல்வதால் மக்களால் அவரை நேரடியாகச் சந்திக்க முடிவதில்லை,
இதனால் மக்கள் தங்கள் துயரங்களை எங்களிடமே வந்து பகிர்ந்துகொள்கின்றார்கள், தலைவர்கள் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்.
சிறிய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்க்கத் தவறினால், நகத்தால் கிள்ள வேண்டியதை கோடரி கொண்டு வெட்ட வேண்டிய நிலை ஏற்படும், அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களைக் கட்டுப்படுத்துவதை விடுத்து அறிவார்ந்த அணுகுமுறையை அரசாங்கம் பின்பற்ற வேண்டும்” என கடுமையாக எச்சரித்துள்ளார்.