பொருளாதாரத் தோல்வியை மறைக்க அடக்குமுறையைத் தேர்ந்தெடுத்த அரசு! முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்றச்சாட்டு
தற்போதைய அரசும் நாட்டில் நிலவும் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல், மக்களின் குரலை ஒடுக்குவதற்காக அடக்குமுறை வழியையே தேர்ந்தெடுத்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று(30.10.2026)நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த அரசு முற்றிலும் தவறியுள்ளமையால், பொருளாதார நெருக்கடியின் பாரிய சுமைகள் பொதுமக்கள் மீது தொடர்ச்சியாகச் சுமத்தப்பட்டு வருகின்றன.
பணவீக்கம்
பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், எதிர்வரும் நாள்களில் எரிபொருள்களின் விலைகளிலும் உயர்வுகள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பே நிலவுகின்றது.

இவ்வாறான இக்கட்டான சூழலில், 'அஸ்வெசும' நலன்புரி உதவிகளைப் பெற்றுவந்த இலட்சக்கணக்கான ஏழை மக்களை அரசு தன்னிச்சையாக அந்தப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
நாட்டில் வறுமை அதிகரித்துள்ள நிலையில், அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை அரசு எவ்வாறு இவ்வளவு பெருமளவில் குறைக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.