ஜே.வி.பிக்குள் ஏற்படும் பிளவு.. முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து
மக்கள் விடுதலை முன்னணிக்குள் கருத்து முரண்பாடுகளும் பிளவுகளும் ஏற்பட ஆரம்பித்துள்ளன என்றும், விரைவில் அந்தக் கட்சி பிளவுபடும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும், "தற்போதைய அரசின் மக்கள் செல்வாக்குக் குறுகிய காலத்திலேயே மிக வேகமாகக் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
மக்கள் மத்தியில் அரசுக்கு எதிராக உருவாகி வரும் கடும் எதிர்ப்பலைகள் மற்றும் செல்வாக்குச் சரிவு தொடர்பான புலனாய்வுத் தகவல்களும் அரசுக்குத் தற்காப்பு ரீதியாகக் கிடைத்துள்ளன.
கடுமையான அடக்குமுறை
இதன் காரணத்தினாலேயே, நாட்டில் மக்களின் குரலை ஒடுக்குவதற்காகப் பல்வேறு கடுமையான அடக்குமுறைச் சட்டமூலங்களைக் கொண்டுவருவதற்கு அரசு தீவிரமாக முயற்சித்து வருகின்றது.

அதேபோன்று, ஜே.வி.பி. கட்சிக்குள்ளும் தற்போது பிளவு ஏற்பட ஆரம்பித்துள்ளது. விரைவில் அந்தக் கட்சி உடையும் நிலைக்குத் தள்ளப்படும். ஏனெனில், மனசாட்சியுள்ள மனிதர்களும் மக்களுக்காகச் சிந்திப்பவர்களும் இன்னமும் அந்தக் கட்சிக்குள் இருக்கவே செய்கின்றனர்.
நான் இங்கு தேசிய மக்கள் சக்தியைக் குறிப்பிடவில்லை. ஜே.வி.பி. என்ற முதன்மைக் கட்சியையே குறிப்பிடுகின்றேன். ஏனெனில், தேசிய மக்கள் சக்தி எனும் கூட்டமைப்பு ஏற்கனவே பிளவுபட ஆரம்பித்துவிட்டது என்பதுதான் உண்மை." என்றார்.