ஜெகத் ஜயசூரியாவுக்கு தடை விதிப்பதற்கு சரியான நேரம்! பிரித்தானியாவில் வெளியான சிறப்பு ஆவணப்பதிவு
2009 ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் மீது போர்க்குற்றங்களை புரிந்த இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியாவுக்கு பிரித்தானியா தடை விதிப்பதற்கு இது சரியான நேரம் என கோரப்பட்டு புதிய ஆவணப்பதிவொன்று வெளியிடப்பட்டுள்ளது.
போர்க்குற்ற ஆதாரங்களை ஏற்கனவே ஆவண வடிவில் வெளியிட்ட பிரித்தானிய இயக்குநர் கலம் மக்கரேயும், பிரபல பிரித்தானிய ஊடகர் பிரான்சிஸ் ஹரிசனும் இணைந்து இந்தக் குறுகிய ஆவணப்பதிவை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆவணத்தில், 2009 இல் இடம்பெற்ற சில காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன்,இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஜெகத் ஜயசூரியா போர்க்குற்றங்களை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெனரல் ஜெகத் ஜயசூரியா 2007ஆம் ஆண்டு, வன்னியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கட்ட பின்னர், தமிழ் மக்கள் மீது பல தாக்குதல்களும் சட்டத்துக்கு புறம்பான கொலைகளும் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான போர்க்குற்றங்களுக்கு காரணமான ஜெனரல் ஜெகத் ஜயசூரியாவுக்கு மக்னிற்ஸ்கி சட்டப்பயன்பாட்டின் அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் தடைவிதிப்பதற்கு இதுவே சரியான தருணம் எனவும் அந்த விவரணத்தில் கோரப்பட்டுள்ளது.