நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பாணை
இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணை இன்றையதினம்(05.02.2025) கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 18ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை
நாமல் ராஜபக்சவால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபா நிதி, ரக்பி விளையாட்டை ஊக்குவிக்கும் பெயரில் பெறப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளரும் தற்போதைய அமைச்சருமான வசந்த சமரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடத்தப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கோட்டை நீதவான் நீதிமன்றில் சாட்சியமளித்திருந்தனர்.
அந்த வழக்கில் சந்தேகநபராக கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |