மட்டக்களப்பில் போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கும் பொலிஸ் விசாரணை (Photos)
கடந்து 8ஆம் திகதி செங்கலடிக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு எதிராக பண்ணையாளர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் செய்தி அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்களான சசி புண்ணியமூர்த்தி, வாலசிங்கம் கிருஷ்ணகுமார் ஆகிய இருவரிடமும் அவரது வீட்டுக்கு தேடி வந்த மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரி சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்து நீதிமன்ற முறி பத்திரத்திலும் கையெழுத்து வாங்கி சென்றுள்ளனர்.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் வந்து என்ன செய்தீர்கள்?, எவ்வளவு நேரம் அங்கு இருந்தீர்கள்?, ஆர்ப்பாட்டத்துக்கு சென்று இருந்தீர்களா?, அங்கு என்ன செய்தீர்கள்?, ஆர்ப்பாட்டத்தின் போது ஏதும் பிரச்சனை நடந்ததா?, ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் இருந்தார்களா?, ஆர்ப்பாட்டத்தின்போது வாகனங்கள் பாதையால் சென்றதா?, ஆர்ப்பாட்ட இடத்தைவிட்டு எத்தனை மணிக்கு சென்றீர்கள்? உள்ளிட்ட விடயங்கள் வினவப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களையும் விசாரணை உட்படுத்தும் நடவடிக்கையில் மட்டக்களப்பு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றதாக தெரியவருகிறது.
கடந்த எட்டாம் திகதி கால்நடை பண்ணையாளர்கள், காணாமல் போனோர் அமைப்பு, சிவில் சமூக அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு எதிரான எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணை முன்னெடுப்பு
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை வீடியோ எடுத்த பொலிஸார் தற்போது அவர்களுக்கு எதிரான விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அறிய முடிகின்றது.
அந்த வகையில் குறித்த போராட்ட களத்தில் கலந்து கொள்ளாத மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஒருவரது வீட்டிலும் இன்று வாக்குமூலம் பெறுவதற்காக சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தான் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், கலந்து கொள்ளாத தான் எதற்காக வாக்குமூலம் எடுக்க வேண்டும் என குறித்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கௌரி பொலிஸாரை கேள்வி கேட்டு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.