ஒவ்வொருவருக்கும் தேவையானவாறு நாட்டை முடக்க முடியாது – பந்துல குணவர்தன
ஒவ்வொருவருக்கும் தேவையானவாறு நாட்டை முடக்க முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டை முடக்கினால் தேயிலை, இறப்பர், தெங்கு மற்றும் சிறுபோகங்கள் உள்ளிட்ட செய்கைகளை ஏற்றுமதி செய்ய முடியாத நிலைமை உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை முடக்கினால் ஏற்றுமதி வருமானம் கிடைக்காது எனவும் அவ்வாறு செய்தால் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு காலியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாவிட்டால் எரிபொருள், மருந்து வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளினால் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கும் நாட்டை முடக்க முடியும் எனவும் அதற்கான பொருளாதார இயலுமை காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இலங்கையினால் அவ்வாறு நாட்டை முடக்க முடியாது எனவும் அவ்வாறு செய்தால் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முடக்காது அதி உச்ச அளவில் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.