விமான பயணிகளிடம் பேஜர் மற்றும் வாக்கி - டாக்கிக்கு தடை விதித்த கட்டார் ஏர்வேஸ்
பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து விமானங்களில் வாக்கி - டாக்கி மற்றும் பேஜர்களை கொண்டு செல்ல கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது ஆயிரக்கணக்கான மின்னணு சாதனங்கள் வெடித்ததை அடுத்து, லெபனான் சிவிலியன் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவுறுத்தலின்படி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெடித்துச் சிதறிய பேஜர்கள்
கடந்த ஆண்டு முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு ஆதரவு தெரிவித்தது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி பிற்பகல் லெபனானில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த 100க்கும் அதிகமான பேஜர்கள் வெடித்துச் சிதறின.
இந்த விபத்தில், ஹிஸ்புல்லா அமைப்பினர் உட்பட 12 பேர் உயிரிழந்ததுடன் 2500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, ஹிஸ்புல்லா பிரதிநிதி அலி அம்மாரின் மகனும் உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, மறு நாள் மீண்டும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு
இந்த தொடர் சம்பவங்களின் எதிரொலியாக லெபனான் சிவிலியன் ஏவியேஷன் இயக்குநரகம் பெய்ரூட்டில் இருந்து இயங்கும் விமான நிறுவனங்களை பயணிகளிடம் வாக்கி-டாக்கிகள் மற்றும் பேஜர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அதேபோன்று, மேற்படி மின்னணு சாதனங்கள் விமானம் மூலம் அனுப்பப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெய்ரூட் ராஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BEY) புறப்படும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
அத்துடன், மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் தங்களுடன் தங்களது பைகளுடனோ, பேஜர் மற்றும் வாக்கி - டாக்கி ஆகியவற்றை வைத்திருக்க அனுமதிக்கப்படாது என்றும் இந்த தடை பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.