30 வருடங்களாக அநீதியை சந்திக்கும் வடக்கு சிங்களவர்..! பேரணியாக திரண்டு கோரிக்கை முன்வைப்பு
வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் சரியான முறையில் வழங்கப்பட வேண்டும் என கோரி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணி இன்று(19.03.2026) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை நடைபெறும் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஊடாக குறித்த பேரணி இடம்பெற்றது.
30 வருடங்களாக இழைக்கப்படும் அநீதி
யாழ்ப்பாணம் நாகவிகாரையில் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான பேரணி ஆளுநர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

கடந்த 78 ஆண்டுகளாக பல்வேறு அரசுகள் நாட்டில் ஆட்சி செய்தபோதிலும், வடக்கில் வாழும் சிங்கள மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை எனவும் ஏனைய இனங்களின் பிரச்சினைகள் அரசியல் வழிகளில் முன்வைக்கப்பட்டாலும், வடக்கு சிங்கள மக்களின் உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன.
30 ஆண்டுகள் நீண்ட உள்நாட்டுப் போருக்கு முன்பும், அதன் போதும், பின்னரும் அவர்கள் பல்வேறு இழப்புகளையும் அநீதிகளையும் சந்தித்துள்ளனர். இதுவரையில் எந்த அரசும் அவர்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்கவில்லை.
இந்த பிரச்சினைகள் குறித்து பேசப்படும் ஒவ்வொரு முறையும், அவை இனவாதமாகக் குற்றம் சாட்டப்பட்டு, தேசிய ஒற்றுமைக்கு எதிரானதாகக் கூறி ஒதுக்கப்படுகின்றன.

மக்களின் பிரச்சினைகள்
வடக்கு சிங்கள மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள்.
- நில எல்லை பிரச்சினைகள்
- மீள்குடியேற்ற சிக்கல்கள்
- சிங்கள புத்த மத பாரம்பரிய இடங்களின் பாதுகாப்பு மற்றும் சிங்கள மொழியில் கல்வி பெறுவதில் சிரமம்
- சிங்கள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை
- அரசு அலுவலகங்களில் சிங்கள பணியாளர்கள் இல்லாமை
- மத ஸ்தல பராமரிப்பு சிக்கல்கள்
- கிராமங்களில் அடிப்படை வசதிகள் குறைவு
- நில உரிமை பிரச்சினைகள் ஆகியவற்றை முன்னிறுத்தி குறித்த பேரணி இடம்பெற்றது.
குறித்த பேரணி ஒவ்வொரு மாவட்டமும் சென்று இறுதியாக கையெழுத்து பெறப்பட்டு ஜனாதிபதி செயலகத்தில் நிறைவு பெறவுள்ளது.