முன்பள்ளி கல்வி முறையில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் வடமாகாண ஆளுநர்
இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் சிறப்பான நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
காரைநகர், புதுவீதியில் அமைந்துள்ள அம்பாள் முன்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் இன்று (25.01.2026) கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பிள்ளைகளின் ஆளுமை விருத்தியில் முன்பள்ளிக் கல்வியே முக்கிய பங்காற்றுகின்றது. அதுவே சிறந்ததொரு எதிர்காலச் சமூகத்துக்கான அத்திவாரமாகும்.
பெற்றோர்கள் பாடங்களைக் கற்பிக்கும் இடங்களை விட, நல்ல பழக்கவழக்கங்களைப் போதிக்கும் இடங்களிலேயே தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும்.

சிறுபராயத்தில் அவர்கள் பழகும் நற்பண்புகளே அவர்களைச் சமூகத்தில் சிறந்தவர்களாக வழிநடத்தும். இலங்கையில் முன்பள்ளிகள் வெவ்வேறு கற்பித்தல் முறைகளைக் கொண்டுள்ளன. இதனைச் சீர்படுத்தி, ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வடக்கு மாகாண சபையால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போதாது என்பதை நான் அறிவேன். தற்போதைய நிலையில் அதனை உடனடியாக அதிகரிக்க முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் அரசாங்கம் இதனை ஒரு நிரந்தரக் கட்டமைப்புக்குள் கொண்டு வரும்போது இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
மாகாண சபையின் நிதி திட்டம்
1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த முன்பள்ளி, இன்று மக்களின் பங்கேற்புடன் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் எப்போதும் நிலைத்து நிற்கும். காரைநகர் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதேசத்தில், நவீன வசதிகளுடன் கூடிய இந்த கட்டிடம் அமைந்தமை மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.

முன்பள்ளியின் எஞ்சியுள்ள தேவைகளை மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், காரைநகர் பிரதேச செயலாளர் ரஞ்சனா நவரத்தினம், தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திருஞானசம்பந்தன் ஞானச்சந்திரன், காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் திரு. கிருஷ்ணன் கோவிந்தராஜன், தீவக வலயக் கல்வி (முன்பள்ளிகள்) உதவிக் கல்விப் பணிப்பாளர் சிவசுப்பிரமணியம் பவானந்தன் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் எஸ்.கே.சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி