வடக்கு மாகாணத்தில் மாபெரும் அபிவிருத்தி திட்டங்கள்: இந்திய நிதியுதவிக்கு ஆளுநர் நன்றி
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதற்காக இந்திய அரசாங்கத்துக்கும்,மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா.வேதநாயகன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி ஆகியோர், வடக்கு மாகாண ஆளுநரை இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின்போது, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மருத்துவமனைகளின் அபிவிருத்தி
குறிப்பாக, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளின் அபிவிருத்தி மற்றும் காரைநகர் படகுக் தள அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆளுநருடன் பிரதி உயர்ஸ்தானிகர் கலந்துரையாடினார்.
அண்மையில் ஏற்பட்ட டித்வா பேரிடரின் பின்னரான உதவித் திட்டங்கள் குறித்தும், இந்தியாவின் 'அயலவருக்கு முன்னுரிமை' என்ற கொள்கையின் அடிப்படையிலான முன்னுரிமைகள் தொடர்பிலும் பிரதி உயர்ஸ்தானிகர் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், கடன்களாக வழங்கப்பட்ட சில உதவித் திட்டங்கள் தற்போது நன்கொடைகளாக மாற்றப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டித்வா பேரிடரின்போது இந்திய அரசாங்கம் வழங்கிய உடனடி உதவிகளுக்கு நன்றி தெரிவித்த ஆளுநர், இந்தியாவின் தொடர்ச்சியான பங்களிப்புக்களைப் பாராட்டினார்.
இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை தொடர்பிலும், துறைசார் கௌரவ அமைச்சர் நேற்றையதினம் இது குறித்து வெளியிட்ட கருத்துக்களையும் ஆளுநர் இதன்போது நினைவுகூர்ந்தார்.
நிலைப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள்
பலாலி விமான நிலையத்தின் முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், எதிர்காலத்தில் அதன் ஏனைய விரிவாக்கச் செயற்பாடுகளுக்காக இலங்கை அரசாங்கம் விடுக்கும் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதிலை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்திய முதலீட்டாளர்களை இங்கு முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரதி உயர்ஸ்தானிகர், முதலீட்டு வலயங்கள் தொடர்பான கொள்கை நிலைப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னர், இந்திய முதலீட்டாளர்களை நிச்சயம் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்க முடியும் என உறுதியளித்துள்ளார்.





உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam